வாழ்வாதாரச் செய்கைக்காக வயல் நிலங்களைப் பிரித்துத் தாருங்கள்: கிளிநொச்சி மக்கள் கோரிக்கை

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளத்தின் கீழ் உள்ள வயல் நிலங்களை தமது வாழ்வாதாரச்செய்கைக்கு பகிர்ந்தளிக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் மலையகப் பகுதியில் இடம்பெற்ற இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களும், யுத்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு பல்வேறு இடங்களிலும் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களும் கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளம் பகுதியில் கடந்த 1984, மற்றும் 1985ஆம் ஆண்டு காலப்பகுதியில் குடியேறினர்.

இந்நிலையில், ஆனைவிழுந்தான் குளத்தின் கீழ் இருந்த சுமார் 400 ஏக்கர் வரையான வயல் நிலங்களில் ஒரு பகுதியை 193 வரையான குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குளம் புனரமைக்கப்படாமை குளத்தில் நீர் தேக்க முடியாமை மற்றும் யுத்தம் காரணமாக ஏற்பட்ட இடம்பெயர்வு போன்ற காரணங்களால் பயிர்செய்கை நிலங்கள் கைவிடப்பட்டன.

கடந்த 2009ஆம் ஆண்டு மக்கள் மீள்குடியேறியதை தொடர்ந்து தற்போது 414 வரையான குடும்பங்கள் மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், மேற்படி குளத்தின் கீழ் உள்ள வயல் நிலங்களை உரிய முறையில் பகிர்ந்தளிக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் அன்றாடம் கூலிவேலை செய்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டே வாழும் நிலையில் உள்ளதாகவும், தற்போது கூலிவேலை கிடைக்காததன் காரணத்தினால் குழந்தைகள் மற்றும் முதியவரையும் விட்டுவிட்டு வேறு மாவட்டங்களுக்கு தொழில் தேடிச்செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தங்களது நிலையினை கருதி தாங்கள் வாழ்வாதாரத்திற்காக ஒரு ஏக்கர் நெற்செய்கையை மேற்கொண்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்க்கையைக்கொண்டு நடத்தமுடியும் எனவே இதனை பகிர்ந்தளிக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீள்குடியேற்றத்தின் பின்னர் நாங்கள் இது தொடர்பில் அரசியல்வாதிகளிடமும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமும் முறையிட்டுள்ள நிலையில் இதுவரையில் எவரும் எதுவித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை எனவும் விரைவில் இது குறித்து உரியவர்கள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

 

You might also like