வவுனியாவில் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி நடமாடும் சேவை

தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஜனாதிபதி நடமாடும் சேவை இன்றைய தினம் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெறும் இவ் நடமாடும் சேவை பொலநறுவை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து மூன்றாவதாக வவுனியாவில் நடைபெற்றது.

வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரிக்கு காலை 10.00 மணிக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலாசார வாத்தியங்கள் முழங்க வரவேற்கப்பட்டதுடன் கல்லூரி வளாகத்தில் ஜனாதிபதியால் மரம் ஒன்று நாட்டப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் 5000 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதுடன், திவிநெகும திட்டத்தின் கீழ் ஆயிரம் பேருக்கும் சுயதொழில் உதவிகளும், இளைஞர் யுவதிகளுக்கான சுயதாழில் முயற்சிக்கான ஊக்குவிப்புக்களும் வழங்கப்பட்டது.

அத்துடன் காணிப்பிரச்சனை, ஆள்அடையாள அட்டை, பிறப்பு – இறப்பு பதிவுகள், கடவுச்சீட்டு, விவாகப் பதிவுகள் எனப் பல்வேறு சேவைகளும் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இவ் நடமாடும் சேவைக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் வரவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது.

நிகழ்வில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர குணவர்த்தன, வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், மற்றும் அமைச்சர்களான சுவாமிநாதன், கஜந்த கருணாதிலக, விஜயகலா மகேஸ்வரன், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், கே.கே.மஸ்தான், சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவமோகன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மாவட்ட அரசாங்க அதிபர்கள், வடக்கு ஆளுனர், அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

You might also like