அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் நிலவிய பாகுபாடே யுத்தத்திற்கு வழிவகுத்தது: வவுனியாவில் ஜனாதிபதி

வடக்கு- கிழக்கிற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் உரிய முறையில் முன்னெடுக்கப்படாமையே கடந்த கால யுத்தத்திற்கு வழிவகுத்தது என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டுவரும் நடமாடும் சேவையின் மூன்றாவது நடமாடும் சேவை வவுனியா சைவப்பிரகார மகளிர் கல்லூரியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. அங்கு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த ஜனாதிபதி, ”அதிகார பகிர்வை எதிர்த்து போராடுபவர்கள் வடக்கு- கிழக்கிற்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமையை நேரில் பார்வையிட வேண்டும்.

கடந்த 50 வருட காலமாக நாட்டின் ஏனைய மாகாணங்களில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் அவற்றில் எவையும் வடக்கு- கிழக்கு மாகாணங்களை சென்றடையவில்லை. இந்த வேறுபாடே கடந்த கால யுத்தத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அனைத்து மாவட்டங்களுக்கும், மாகாணங்களுக்கும் அபிவிருத்தி சமமான முறையில் பகிரப்படவில்லை. இப்பகுதியில் பல பாடசாலைகளிலும், அரசாங்க திணைக்களங்களிலும் பற்றாக்குறை நிலவி வருகின்றது.

எனவேதான் மேல் மாகாணத்தினை போன்று வட மாகாணத்தினையும் அபிவிருத்தி செய்யவேண்டும் என நாம் செயற்பட்டு வருகின்றோம்.

அபிவிருத்தி வேலைத்திட்டங்களை போன்று, அரசியல் அமைப்பில் மாற்றத்தினை ஏற்படுத்துவதிலும் இந்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. அதன்படி அதிகாரத்தினை பகிர்ந்தளிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இதனை தவறாக புரிந்துக் கொண்டுள்ள சிலர் யுத்தத்தினால் பிரிக்க முடியாத நாட்டை தற்போது நாம் பிரிக்கபோகின்றோம் என விமர்சிக்கின்றனர். அதனை நான் முற்றாக நிராகரிக்கிறேன்.

அதிகார பரவலாக்கலை எதிர்ப்பவர்கள் வடக்கு- கிழக்கு பகுதிகளுக்கு வரவேண்டும். தென் மாகாணத்தில் சப்பிரகமுவ மாகாணத்தில் உள்ள அபிவிருத்தி வேலைகள் இந்த மாகாணங்களில் உள்ளதா என்பதனை அவர்கள் தங்களது கண்களால் பார்த்து புரிந்துகொள்ளவேண்டும்” என்றார்.

You might also like