ஊடக கல்வி நிலையங்கள் கட்சி சார்ந்து செயற்படக்கூடாது : வவுனியாவில் கே.காதர் மஸ்தான்!!

ஊடகவியலாளர்கள் ஒரு கட்சி சார்ந்து செயற்படக்கூடாது, அதேபோல ஊடக கற்கை நெறி கல்லூரிகள் அரசியல் சார்ந்து செயற்படாமல் அனைத்து கட்சி மக்கள் பிரதிநிதிகளையும் அரவணைத்து செயற்பட முன்வரவேண்டும் என நேற்று வவுனியா விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற வடக்கு ஊடகவியலாளர்கள் பயிற்சிக்கல்லூரியில் பயிற்சிகளை முடித்து சான்றிதழ் வழங்கும், சமூகசேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

சமூக வலையத்தளங்களை தற்போது பார்க்கமுடியவில்லை யாரையோ ஒருவரைத்தாக்கவேண்டும் என்ற நோக்கத்துடனே செயற்படுவது. ஒரு இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்ட செய்தியை வைத்து இவர் எந்தக்கட்சியைச் சார்ந்தவர் என்பதை தெரிந்துகொள்ளமுடியும் முடியுமானவரை இச் செயற்பாடுகளை நாங்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

வவுனியாவைப் பொறுத்தவரையில் ஒரு செய்தி வரமுன் அத்தகவல் சரியா என்பதை அக்கட்சியிடம் உறுதிப்படுத்தி வெளியிடுவது அவசியம். ஆனால் அவ்வாறு செய்படாமல் செய்திகளைப்பிரசுரித்த பின்னர் பார்த்தால் அது தவறான கருத்தாகவே காணப்படுகின்றது.

அவ்வாறான நிகழ்வுகள் இன்று வவுனியா மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அனேகமான ஊடகவியலாளர்களுக்குத் தெரியும் அது என்ன என்று.

சிலர் தங்களுடைய கட்சியை உயர்த்துவதற்கும் தங்களது கட்சி சார்ந்த செய்திகளைப்பிரசுரித்து வருவதும் தெரிந்ததே. தற்போது இந்த சமூக வலையத்தளங்கள் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வாறு செயற்படும் ஊடகவியலாளர் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாகவே காணப்படுகின்றார்கள். தற்போது நல்லவிடயங்களுக்காக சமூகத்தில் சமூக வலைத்தளங்கள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். சமூகப்பொறுப்புள்ள விடயங்களில் கல்வி, சமூகம் இவ்வாறான நல்ல விடயங்களை கையிலெடுத்து மக்களிடத்திற்கு கொண்டு சென்று மாற்றத்தை ஏற்படுத்தும் விதமான செய்திகளாக பிரசுரிக்க முன்வரவேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் தாங்கள் தவறு செய்கின்றார்கள் என்றால் துணிந்து அவர் இவ்வாறான தவறுகள் செய்கின்றார் என்று நேரடியாக தொடர்புபட்ட மக்கள் பிரதிநிதியிடம் தொடர்புகொண்டு கேட்டு அவரைத் திருத்துவதற்காக ஊடகங்கள் செய்தால் அது தவறல்ல. நாங்கள் ஒருவரை அவமானப்படுத்தினால் அதன் பிரதிபலன் எமக்கு திரும்பவரும் என்று நினைத்துக்கொள்ளவேண்டும்.

அதேபோல இன்றும் எனது மனதில் பட்டதை நான் கூறியாக வேண்டும். இன்று இடம்பெறும் குறித்த வடக்கு ஊடக கல்லூரி நிகழ்விற்கு வருகை தந்த விருந்தினர்கள் என்பவர்கள் வவுனியா மாவட்டத்தைத்தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள். அவர்கள் ஒரே கட்சியைச்சார்ந்தவர்களாகவே காணப்படுகின்றார்கள்.

எங்கு அந்தத்தவறு இடம்பெற்றுள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. அனுராதபுரம், புத்தளம், திருகோணமலை மாவட்டங்களிலிருந்து இங்கு வந்துள்ள மக்கள் பிரதிநிதிகள் எந்தக்கட்சியைச்சார்ந்தவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் குறித்த மாவட்டங்களில் இன்னும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேறு கட்சியைச்சார்ந்தவர்கள் இருக்கின்றார்கள். அவர்களிடம் கேட்டு அவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

ஏனென்றால் என்னுடைய பார்வைக்கு அந்த அழைப்பிதழில் அழைக்கப்பட்ட விருந்தினரைப்பார்க்கும்போது இது ஒரு கட்சி சார்ந்த ஊடகமாகவும் ஊடக கல்லூரியாகவும் காணப்படுகின்றதா என்ற கேள்வி எனக்குள்ளும் எழுகின்றது. வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் இவ்வாறான வேறுபாடுகள் காட்டப்படவில்லை. என்று மேலும் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

இன்றைய நிகழ்வில் முதன்மை விருந்தினராக வணிகத்துறை அமைச்சர் ரிஸாட் பதியூதின் மற்றும் அவரது கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆகியோரின் பெயரும் அழைப்பில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. எனினும் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

You might also like