வடக்கில் கணவனை இழந்த பெண்களை தரக்குறைவாக பேசிய எம்.பியால் சர்ச்சை

வடக்கில் யுத்தம் காரணமாக கணவனை இழந்த பெண்கள் எப்போதும் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள் என தரக்குறைவாக அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இர்ஷாக் ரகுமான் உரையாற்றியமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் இர்ஷாக் ரகுமான் உரையாற்றியமைக்கே இவ்வாறு விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் உரையாற்றிய வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான்,

ஊடக நிறுவனங்களாயினும் ஊடக கற்கை நிறுவனங்களாக இருந்தாலும் அரசியல் கலப்பின்றி இருத்தல் வேண்டும்.

இந் நிகழ்வுக்கு கூட வவுனியாவில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சி அரசியல்வாதிகளை அழைத்துள்ள போதிலும் வேறு மாவட்டங்களில் இருந்து ஒரே கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகளையே அழைத்துள்ளீர்கள்.

இவ்வாறு அழைப்பதானது உங்களது ஊடக நிறுவனம் அரசியல் சார்ந்து பார்க்கப்பட்டுவிடும். எனவே அரசியலாளர்களை அழைக்கும் போது அனைத்து கட்சிகளையும் சேர்ந்தவர்களை அழைத்து நிகழ்வுகளை நடத்துங்கள். அது சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

இதனையடுத்து உரையாற்றிய அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இர்ஷாக் ரகுமான்,

மஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் கணவனை இழந்த பெண்களைப்போன்று எதற்கும் குறை கூறிக்கொண்டிருக்கின்றார்.

இவ்வாறு கணவனை இழந்த பெண்களே எதற்கும் குறை கூறுவார்கள் என பல தடவைகள் தெரிவித்ததுடன், மஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுர்தீன் போன்று அமைச்சராக வருவதற்கு முயற்சிக்கின்றார்.

அவருக்கு இறைவன் நாட்டம் செலுத்தினால் இது கிடைக்கும். எனினும் அவருக்கு அரசியல் முதிர்ச்சி இன்மையே இவ்வாறு குறை கூறுவதற்கு காணரமாக உள்ளது.

நானும் வர்த்தக துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவனே. எனினும் எனக்கு இரண்டு வருடத்தில் அரசியல் தெளிவு கிடைத்துள்ளது.

எனினும் மஸ்தானுக்கு அதுகிடைக்கவில்லை. எனினும் அவரும் அரசியல் முதிர்ச்சியை அடைந்த பின்னர் கணவனை இழந்த பெண்கள் குறை கூறுவதைப்போன்று குறை கூறமாட்டார் என தெரிவித்தார்.

இந் நிலையில் பாராளுமன்ற உறுப்பினரின் இவ் உரையை அவதானித்த சமூகசெயற்பாட்டாளர்கள் பலர் வடக்கில் யுத்தத்தினால் கணவனை இழந்த பல பெண்கள் வாழும் நிலையில் இப் பெண்களை அவதூறாக அனுராபுரம் மாவட்ட எம்.பி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்ததுடன், அவர் நிகழ்வில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் நிகழ்வு ஏற்பாட்டாளாகளுக்கு தெரிவித்திருந்தார்கள்.

இதனையடுத்து நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் சில நிமிடங்களில் மண்டபத்தில் இருந்து வெளியேறியிருந்தார்

You might also like