வவுனியா வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் இதுவரை 6 சந்தேகநபர்கள் கைது

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் மற்றும் அச்சுறுத்தல் விளைவித்தமை தொடர்பில் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடுகளை துணியால் மறைத்துவிட்டு வீதியில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதன்போது வியாபார நிலையம் ஒன்றையும் சேதப்படுத்தியிருந்த நிலையில், சம்பவத்தில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இதுவரை சந்தேகத்தின் அடிப்படையில் ஆறுபேரை கைது செய்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like