பசி தாங்காது சத்தியெடுத்த பாடசாலை மாணவிக்கு நேர்ந்த அநீதி! விசாரணைகள் தீவிரம்
பசி தாங்காமல் சத்தியெடுத்த மாணவி கர்ப்பிணியாக இருப்பதாக குற்றம் சாட்டி பாடசாலையிலிருந்து விலக்கிய சம்பவம் குறித்த பல்வேறு தரப்புகளில் விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன.
தம்புள்ளை நகரின் அருகே அமைந்துள்ள மடாட்டுகம சிறுநகரத்தின் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியொருவர் காலை உணவு இன்றி பாடசாலைக்கு வந்திருந்தார்.
எனினும் பசி தாங்காமல் சற்று நேரத்தில் அவர் சத்தியெடுக்க, குறித்த மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து பாடசாலை அதிபர் உடனடியாக மாணவியின் கல்வியை இடைநிறுத்தியிருந்தார்.
இந்தச் சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றிருந்தது. சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மாணவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கல்வி அமைச்சின் அதிகாரிகள் இந்த சம்பவம் நடந்த இரண்டொரு நாட்களிலேயே விசாரணைகளை ஆரம்பித்திருந்ததுடன், பொலிஸாரும் இது தொடர்பான விசாரணைகளில் களமிறங்கியிருந்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
பல்வேறு தரப்பிலிருந்தும் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் காரணமாக தவறிழைத்த அதிபர் தற்போது பதறிப் போன நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தாரிடம் சமரசம் பேசிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.