முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலைக்கு மிக விரைவில் வெளிநோயாளர் பிரிவு

முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்டு வரும் வெளிநோயாளர் பிரிவு மிக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

மாங்குளம் வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு தற்போது அமைக்கப்பட்டு வருகின்றது. இதன் கட்டுமானப்பணிகள் இம்மாத 31ஆம் திகதிக்குள் நிறைவடையவுள்ளது.

வடமாகாணத்தின் எயிட்ஸ், சயரோகம், மலேரியா, காசநோய், போன்ற நோய்களை அழித்தொழிப்பதற்கான உலக நிதியத்தின் கருத்திட்டத்தின் கீழ் கடந்த 2011ஆம் ஆண்டு தொடக்கம் வடமாகாணத்தில் 68 புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் இறுதியாக மாங்குளம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு அமைக்கப்பட்டு வருகின்றது.

மேற்படி திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் 29 வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகளும் 12 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளும் 15 சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கான விடுதிகளும் 05 மலேரியாத்தடுப்பு பணிமனைகளும் 03 காசநோய் மற்றும் மார்பகசிகிக்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்காக ஆயிரத்து 824 மில்லியன் ரூபாநிதி செலவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் மருத்துவத்தேவைகளை கருதி மல்லாவி பிரதேச வைத்தியசாலை, புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலை என்பன ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதுடன், ஆதார வைத்தியசாலையாக இருக்கின்ற மாங்குளம் வைத்தியசாலை நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் வடமாகாணத்திற்கான புனர்வாழ்வு வைத்தியசாலையாக தரம்உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்றும் இதற்கான அனுமதிகள் கிடைக்கப்பெற்று வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like