வவுனியாவில் கடும் மழை: வெள்ளத்தால் வர்த்தகர்கள் அவலம்

வவுனியா பேருந்து நிலையக் கடைத் தொகுதிக்குள் மழை வெள்ளம் புகுந்தமையால் வர்த்தகர்கள் தமது பொருட்களை பாதுகாக்க முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் இன்று பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக பேருந்து நிலைய கடைத்தொகுதிக்குள் மழை நீர் உட்புகுந்துள்ளது.

வவுனியா பிரதான பேருந்து நிலையத்தில் காணப்படும் நகரசபைக்குச் சொந்தமான மாடிக்கட்டடத் தொகுதி ஒன்றில் காணப்படும் சேதம் காரணமாக அவற்றின் ஊடாக வரும் மழை நீரானது வர்த்தக நிலையங்களுக்குள் நேரடியாக செல்கின்றது.

இதன்காரணமாக வியாபாரம் செய்ய முடியாத நிலையில் வர்த்தகர்கள் உள்ளதுடன் தமது பொருட்களை பாதுகாக்க வேறு இடத்தை தேட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு 7 கடைகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளதோடு, குறித்த கட்டடத்திற்கு மாதாந்தம் 3,200 ரூபா வீதம் வவுனியா நகரசபையால் வாடகை அறவிடப்படுவதுடன் அப்பணம் உரிய காலப்பகுதிக்குள் செலுத்தாது காலம் தாழ்த்திச் செலுத்தினால் தண்டப்பணமும் அறவிடப்படுகின்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த கடைகளை மழை காலங்களில் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்னர்.

You might also like