வவுனியா வடக்கு பிரதேசசபையிலுள்ள சிங்கள மக்களை அவர்களின் பிரதேசசபையுடன் இணைக்க வேண்டும்

வவுனியா வடக்கு பிரதேச சபையுடன் இணைக்கப்பட்டுள்ள நான்கு வட்டாரங்களை மணலாறு(வெலிஓயா)பிரதேச சபையுடன் இணைத்தல் தொடர்பாக முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சரும் வடமாகாணசபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் அவர்களினால் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சுக்கு நேற்று முன்தினம் (24.10.2017) கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கலாபோகஸ்வௌயை அண்டிய குடியேற்றக் கிராமங்களான 17 கிராமங்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் நேரடியாக நிலத்தொடர்பு அற்றவையாகும். இந்தக்கிராமங்களை உள்ளடக்கியதான 04 வட்டாரங்கள் கடந்த உள்ளுராட்சி தேர்தலின்போது வவுனியா வடக்கு பிரதேச சபையுடன் இணைக்கப்பட்டிருந்தன.

எனினும் இந்தக்கிராமங்களை சேர்ந்த மக்கள் தமது பிரதேச செயலக சேவைகளை மணலாறு (வெலிஓயா) பிரதேச செயலகத்திலிருந்தே பெற்று வந்தனர். 2017ம் ஆண்டு வெளியிடப்பட்ட தேருனர் இடாப்பில் இவர்களின் பெயர்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாரம்பரிய தமிழ் கிராமசேவையாளர் பிரிவுகளான வெடிவைத்தகல்லு மற்றும் பட்டிக்குடியிருப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த மக்கள் தமது சுகாதார சேவைகளை முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்(RDHS) பணிமனையிலும், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கான சேவைகளை (MOH) வவுனியா தெற்கு சிங்கள பிரிவிலுள்ள பணிமனையிலும், மின்சார, தொலைபேசி சேவைகளை அனுராதபுர மாவட்டத்திலிருந்தும் பெற்று வருகின்றார்கள்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரதேச சபை சேவைகளை பெறும்பொருட்டு 75 கி.மீ காட்டுவழியினால் இவர்கள் பயணிக்கின்றார்கள். இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு வவுனியா வடக்கு பிரதேச சபையின் 47வது அமர்வில் மேற்படி வட்டாரங்களை சேர்ந்த 04 உறுப்பினர்கள் தாங்கள் வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆளுகையிலிருந்து விடுபடகோரி முன்வைக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த மாகாணசபை அமர்வில் இது தொடர்பாக என்னால் முன்வைக்கப்பட்ட விசேட பிரேரணை சபையினால் அஙகீகரிக்கப்பட்டு மாகாணசபைகள் உள்ளுராட்சி அமைச்சருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஆகவே தற்போது மணலாறு (வெலிஓயா) பிரதேசத்திற்கு தனியான பிரதேச செயலகம் நிறுவப்பட்டள்ளநிலையில் மேற்படி நான்கு வட்டாரங்களைச் சேர்ந்த 17 கிராமத்தைச் சேர்ந்த மக்களையும் அவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு மணலாறு (வெலிஓயா) பிரதேச சபையுடன் இணைப்பதற்கு ஆவனசெய்யுமாறு தயவாக கேட்டுக்கொள்கின்றேன்.அல்லது வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையுடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டக்கொள்கின்றேன் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக் கடிதத்தில் பிரதிகளை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் , தலைவர் த.தே.கூ
மாவை சேனாதிராஜா , தலைவர் இ.த.அ.க ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வன்னியில் தற்போது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியில் இருந்து கொண்டு ஆர்ப்பாட்டங்களை மாத்திரம் செய்யும் சமயத்தில் அமைச்சுப்பதவிகள் அற்ற நிலையிலும் அவர் வன்னி மண்ணின் பெருமையை காப்பாற்ற அயராது பாடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like