இளைஞர் பாராளுமன்றம் ஊடாக வவுனியாவில் 22 வேலைத்திட்டங்களுக்கு 3.3 மில்லியன் நிதி ஒதுக்கீடு

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து இளைஞர் பாராளுமன்றத்திற்கு ஒதுக்குகின்ற நிதியின் கீழ் Youth with Talent  மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டம் நாடாளாவிய ரீதியில் இளைஞர் கழகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

வவுனியா மாவட்டத்தில் 22 அபிவிவிருத்தி திட்டங்களுக்கு 3.3 மில்லியன் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட இளைஞர்  பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன் தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் 1500 வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வெற்றியடைந்திருந்த காரணத்தினால் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இவ் வருடம் 3000 வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கியிருந்தார்.

ஒவ்வொரு வேலைத்திட்டத்திற்கும் கடந்த வருடம் 75,000 ரூபா நிதி ஒதுக்கப்பட்டது. இவ்  வருடம் 150,000 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேலைத்திட்டமும் குறைந்தது 300,000 ரூபாய் பெறுமதியாக அமைய வேண்டும்.

செயற்றிடத்திற்கு உரிய மீதமான  நிதியினை மக்கள் பிரதிநிதிகளினுடைய நிதி ஒதுக்கீடு, தொழிலதிபர்கள், நலன்விரும்பிகள் மற்றும்  பொது மக்கள் பங்களிப்பின் ஊடக நிதி பெறப்பட்டு இளைஞர் கழகங்கள்  இவ் வேலைத்திட்டத்தை பூர்த்தி  செய்வார்கள்.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் Youth With Talent மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை   தேசிய இளைஞர்   சேவைகள் மன்றத்தின் மாவட்ட காரியாலயத்தின் அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட இளைஞர் கழக சம்மேளன  தலைவர், பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர்கள், இளைஞர் சேவை அதிகாரிகள்  உடைய நேரடி கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படும்.

இவ் வேலைத்திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்த இளைஞர் கழகங்களுக்கு 4 பிரதேச செயலகங்களிலும் பிரதேச செயலாளர்கள் தலைமையில்  நேர்முகத்தேர்வு நடைபெற்று கழகங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களின் எண்ணிக்கையின்  அடிப்படையில் ஒவ்வொரு  பிரதேச செயலக பிரிவில் வேலைத்திட்டத்தின்  எண்ணிக்கை பகிர்ந்தளிக்கப்படுள்ளது.

அந்த வகையில் வவுனியா  பிரதேச செயலக பிரிவில் 08 வேலைத்திட்டங்களும் , வவவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில்  05 வேலைத்திட்டங்களும், செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில்  05 வேலைத்திட்டங்களும் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில்  04 வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன்  கேசவன் மேலும் தெரிவித்தார்.

You might also like