பேருந்துகளில் பாலியல் துன்புறுத்தல்: கிளிநொச்சி மக்கள் விசனம்

கிளிநொச்சியில் வட்டக்கச்சி, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து தனியார் கல்வி நிலையத்திற்கு மேலதிக வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்கள் பேருந்துகளில் தொடர்ந்தும் பாலியல் ரீதியான துன்புறுத்தலை எதிர்கொள்வதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மக்கள் தெரிவிக்கையில்,

குறித்த மாவட்டத்தின் வட்டக்கச்சி இராமநாதபுரம் கல்மடுநகர், வன்னேரிக்குளம் ஸ்கந்தபுரம், ஆகிய பகுதிகளிருந்து உயர்தரக்கணித விஞ்ஞான பிரிவுகளிலும், ஏனைய பிரிவுகளிலும் கல்வி கற்றும் மாணவர்கள் மேலதிக கல்வியை பெற்றுக்கொள்வதற்காக கிளிநொச்சி நகரிலுள்ள தனியார் கல்வி நிலையங்களிற்கு வருகை தருகின்றனர்.

தனியார் கல்வி நிலையங்களில் மாலை நேர வகுப்புக்கள் மாலை 5.30 மணிவரையும் இடம்பெறுவதனால் வகுப்புக்களில் கலந்து கொள்ள இவ்வாறு தூர இடங்களில் இருந்து செல்லுகின்ற மாணவிகள் கிளிநொச்சியில் இருந்து இரவு 7 மணிக்குப் புறப்படுகின்ற பேருந்துகளில் பயணிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இவ்வாறு 7 மணிக்கு பயணிக்கின்ற மாணவிகள் மீது தொடர்ந்தும் பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்று வருவதாக பாதிக்கப்பட்ட மற்றும் பல்வேறு தரப்புக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கிளிநொச்சிப் பகுதியில் தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்று திரும்பிய மாணவி ஒருவரை பேருந்து நடத்துனர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்த முயற்சித்த வேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தினர்.

இதே வேளை கடந்த வாரம் மாத்திரம் கிளிநொச்சிப்பகுதியல் நான்கிற்கும் மேற்பட்ட துஸ்பிரயோகச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் வட்டக்கச்சி, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து தனியார் கல்வி நிலையங்களிற்கு மாலை நேர வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்கள் பயணிக்கின்ற பேருந்துகளில் தொடர்ந்தும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாக இந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

You might also like