கிளிநொச்சியில் இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட வீடுகள் வெடிப்புற்ற நிலையில்

கிளிநொச்சி – பொன்னகர் பகுதியில் இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வீட்டுத்திட்டத்தில் மக்கள் குடியிருந்து வரும் அதிகளவான வீடுகள் பாதிப்படைந்துள்ளதாக வீட்டின் பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் காணிகள் அற்ற குடும்பங்களுக்கு இந்திய அரசின் நிதியுதவியுடன் மாதிரி விட்டுத்திட்டங்கள் அமைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவின் தெளிகரைப் பகுதி, பச்சிலைப்பிரதேச செயலர் பிரிவிலுள்ள கரந்தாய், கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவில் முசிலம்பிட்டி, கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவில் பொன்னகர் பிரதேசத்திலும் விட்டுத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள இந்திய அரசின் நிதயுதவியுடன் அமைத்துக்கொடுக்கப்பட்ட 75 வீடுகள் அநேகமான வீடுகளின் சுவர்கள் வெடிப்புற்ற நிலையிலும், பழுதடைந்த நிலையிலும் காணப்படுகின்றன.

வீடுகள் வழங்கப்பட்டு ஐந்து வருடங்களுக்குள்ளேயே இந்த வீடுகள் இவ்வாறு சேதமடைந்திருக்கின்றன.

இவ்வாறு பாதிப்புக்களுக்குள்ளான வீடுகளில் இருக்கின்ற பயனாளிகள் தாங்கள் அச்சத்துடன் வாழவேண்டிய நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதேச செயலர் அவர்களிடம் தொடர்பு கொண்டபோது, மாவட்ட ரீதியில் ஆரம்பத்தில் அமைத்துக் கொடுக்கப்பட்ட வீடுகளில் குறைபாடுகள் காணப்படுகின்றன.

பொன்னகர் பகுதியில் இருக்கின்ற வீடுகளில் இவ்வாறான நிலை காணப்படுகின்றது. அடுத்த ஆண்டில் திருத்த வேலைகளுக்கான நிதி வருகின்றபோது முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு நிதிகளை வழங்கி வீடுகளை திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் தெரிவித்துள்ளார்.

You might also like