கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தினை மேச்சல் தரையாக பயன்படுத்த எதிர்ப்பு

கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தினை மேச்சல் தரையாக பயன்படுத்தும் கால்நடை பண்ணையாளர்கள் அங்கிருந்து புல் வெட்டி ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகளிற்காக புல் வெட்டி ஏற்றப்பட்டு வரும் நிலையில் குறித்த செயற்பாட்டிற்கு பண்ணையாளர்கள்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தற்போது கடும் வறட்சியான காலநிலை நிலவி வருகின்ற நிலையில் கால்நடை வளர்ப்பில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பண்ணையாளர்கள் மேச்சல் தரை இன்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவர்களின் பண்ணை வளர்ப்பிற்காக மேச்சல் தரவைகள் ஒதுக்கி கொடுக்கப்படாத நிலையில் குளங்கள், சம தரைகள் போன்றவற்றில் பண்ணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குளக்கட்டின் அபிவிருத்திக்காகவும், அணையின் பாதுகாப்பிற்காகவும் புற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கான புல் கட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கு சில பகுதிகள் அடையாளம் காட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில் கனகாம்பிகை குளத்தில் புல் கட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கு வருகை தந்திருந்த ஒப்பந்தகாரர்களிற்கு பண்ணையாளர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,

வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த குளத்தில் மாத்திரம் குறிப்பிட்ட அளவு நீரும், புற்களும் காணப்படுகின்றது.

இந்த நிலையில் இங்கு புற்களை பெற்று கொண்டால் மேச்சல் தரைக்கு நாம் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும். கால்நடைகளுக்கு மேச்சல் இல்லாது எமது பண்ணை செய்கை பாதிக்கப்படும்.

இந்த நிலையில் குறித்த பகுதியிக்கு வருகை தந்த நீர்பாசன திணைக்கள அதிகாரிகளுடம் பண்ணையாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் புல்கற்றை பெற்றுக்கொள்வதனை இடைநிறுத்தி திரும்பி சென்றிருந்தமை குறிப்பிடதக்கது.

You might also like