ஊற்றுப்புலம் கத்திவெட்டு சம்பவம்: சந்தேகநபர்களுக்கு கடும் நிபந்தனையுடன் பிணை
கிளிநொச்சி – ஊற்றுப்புலம் பகுதியில் கத்திவெட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏழு பேரும் கடும் நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஊற்றுப்புலம் பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திவெட்டில் முடிந்ததுடன், பிரதேசத்தில் அமைதியின்மையும் ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் இரு தரப்பினரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு தரப்பைச் சேர்ந்த ஏழு சந்தேகநபர்கள் நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, கிராம அலுவலர் வதிவிடத்தை உறுதிப்படுத்திய தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஆட்பிணையில் செல்லுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், வாரத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீதிமன்றில் கையொப்பமிடுமாறு உத்தவிடப்பட்டதுடன், கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை மற்றைய தரப்பும் கடந்த வாரம் பிணையில் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.