வவுனியா வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மேலும் 3 பேர் கைது
வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில், நேற்று(26) கைது செய்யப்பட்ட மூவரும் இன்றைய தினம் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும், தெரிய வருவதாவது,
வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு இளைஞர்கள் சிலர் மோட்டர் சைக்கிள் இலக்கத்தகடுகளை துணியால் மறைத்து கட்டிவிட்டு வீதியில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், வியாபார நிலையம் ஒன்றையும் சேதப்படுத்தியிருந்தனர்.
இதில், இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஆறுபேரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பொலிஸார் தேடி வந்த நிலையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டு அவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்