கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு ஒதுக்கப்பட்ட 80 மில்லியன் வீட்டுத்திட்டத்திற்கு?

கிளிநொச்சி பொதுச் சந்தையில் நிரந்தர கட்டடம் அமைப்பதற்கு 150 மில்லின் மதிப்பிடப்பட்டு, இதற்காக முதற்கட்டமாக ஒதுக்கப்பட்ட 80 மில்லியன் வீட்டுத்திட்டம் அமைப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கிளிநொச்சி பொதுச் சந்தையின் மீன், மரக்கறி கடைத்தொகுதிகள் 2012இல் திறந்து வைக்கப்பட்டது.

ஏனைய கடைத் தொகுதிகள் தற்காலிக கொட்டகைகளில் இயங்கி வந்த நிலையில் வெற்றிலை, பழம் தேங்காய் உள்ளிட்ட சில கடைத் தொகுதிகளுக்கான கட்டடம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

ஏனைய வியாபார துறைகளான புடவை மற்றும் அழகுசாதனப் பொருட்கள், பல்பொருள் ஆகியவற்றுக்கான நிரந்தர கட்டடம் அமைப்பதற்கு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சினால் 150 ரூபாவில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு அதில் முதற்கட்டடமாக 80 மில்லியன் மீள்குடியேற்ற அமை்சினால் இவ்வருடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 767 மில்லியன் ரூபாவில் மூன்று மாடிக்களை கொண்ட பாரிய கட்டடம் ஒன்று அமைக்கும் திட்டம் முன்மொழியப்பட்டது.

ஆனால், மாடிக்கடைகளை கொண்ட கட்டடத் தொகுதி தமக்கு பொருத்தமற்றது என சந்தை வர்த்தகர்கள் தெரிவித்திருந்தனர்.

அத்தோடு ஏற்கனவே 150 மில்லியன் ரூபாவில் திட்டமிடப்பட்ட கடைத்தொகுதியை அமைத்துத் தருமாறு அரசியல்வாதிகள் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களுக்கு நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் 767 மில்லின் ரூபாவில் திட்டமிடப்பட்ட கட்டடத் தொகுதியை 2018 ஆம் ஆண்டு அமைப்பதற்கு அமைச்சரவையில் அனுமதி பெறப்பட்டு வரவு செலவு திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்து தரப்படும் என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளா் மாவட்டச் செயலகத்திற்கு கடிதம் மூலம் அறிவித்ததாக குறிப்பிட்டு சந்தைக்கு ஒதுக்கப்பட்ட முதற்கட்ட நிதியான 80 மில்லியனை மாவட்டச் செயலகம் 100 வீடுகளை அமைப்பதற்கு திருப்பியுள்ளது.

ஆனால் குறித்த 767 மில்லியன் வரும் வருடம் வரவுசெலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டால் அது 2019 ஆம் ஆணடே நடைமுறைக்கு வரும்.

அதுவும் சந்தேகம் எனத் தெரிவித்த சந்தை வர்த்தகர்கள், கடந்த 2012 ஆம் ஆண்டும் 174 மில்லியன் கரைச்சி பிரதேசசபைக்கும் அரசுக்கும் இடையில் ஏற்பட்ட அதிகார இழுபறி காரணமாக திரும்பிச் சென்றதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

You might also like