கிளிநொச்சி மகாதேவா சைவ சிறுவர் இல்லத்தின் பெயரை மாற்ற தீவிர முயற்சி

கிளிநொச்சி – மகாதேவா சைவச்சிறுவர் இல்லத்தின் பெயரை மாற்றுவதற்கு ஒரு சிலர் எடுத்து வரும் முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

ஜெயந்திநகர் பகுதியில் குருகுல பிதாவான அப்புஜியினால் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட குருகுலம் சிறுவர் இல்லம் தொடர்ந்து இயங்கி வருகிறது.

கடந்த 2010ஆம் ஆண்டு மீளகுடியேற்றத்தின் பின்னர் மரபு ரீதியாக பேணப்பட்டு வந்த குருகுலம் என்ற பெயர் நீக்கப்பட்டு மகாதேவா சைவச்சிறுவர் இல்லமென அதன் நிர்வாகத்தால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீண்டும் குறித்த சிறுவர் இல்லத்தின் பெயரை மீளவும் மாற்றம் செய்வதற்கு அதன் நிர்வாகம் முயற்சித்து வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் அடையாளமாகக் காணப்படுகின்ற இந்த சிறுவர் இல்லத்திற்கு பல்வேறு புலம்பெயர் உறவுகளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் வர்த்தக சமூகம் எனப் பலதரப்பட்டவர்களின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை சிலர் தங்களுடைய சுயலாப நோக்கத்திற்காக பயன்படுத்த முனைவது மிகவும் கண்டனத்திற்குரியதொன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சிறுவர் இல்லத்தின் தேவைக்கென 80 இலட்சத்திற்கு மேற்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட சொகுசு வாகனம் ஒன்றும் ஒரு சிலரின் சொந்தத்தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றமை தொடர்பிலும் பல்வேறு தரப்புக்களும் குற்றம் சாட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த சிறுவர் இல்லத்தின் பெயர் மாற்றம் செய்வது தொடர்பான கலந்துரையாடல் நாளை மகாதேவோ சைவச்சிறுவர் இல்லத்தின் விருந்தினர் விடுதியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு பல்வேறு தரப்புக்களும் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

You might also like