தண்டவாளத்தில் இரும்பு திருடும் கும்பல் காரணமாக பாரிய இழப்பு

புகையிரதத் தண்டவாளங்களில் இரும்பு திருடும் கும்பல் காரணமாக புகையிரதத் திணைக்களம் பாரிய இழப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டவாளங்களில் பொருத்தப்பட்டுள்ள உருக்கு இரும்பு எடை அதிகம் கொண்டவை என்பதன் காரணமாக அவற்றை திருட்டுத்தனமாக வெட்டி பழைய இரும்புக்கு விற்பனை செய்யும் கும்பல் ஒன்று நாடு முழுவதிலும் செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறான கும்பல் ஒன்றின் திருட்டு வியாபாரத்தை புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் ரத்மலானை பிரதேசத்தில் கையும் மெய்யுமாக சிக்க வைத்துள்ளனர்.

ரத்மலானை, மொரட்டுவை, பாணந்துறை, கல்கிஸ்ஸை போன்ற பிரதேசங்களில் புகையிரத தண்டவாளங்களில் இருந்து இரும்பை வெட்டி எடுக்கும் இந்தக் கும்பல் அதனை கிலோ 40 ரூபா வீதம் பழைய இரும்புக்கு விற்பனை செய்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட 33 ஆயிரம் ரூபா பெறுமதியான தண்டவாளத் துண்டங்கள் புகையிரத திணைக்கள பாதுகாப்பு ஊழியர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவற்றை விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு ரத்மலானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பழைய இரும்பு என்ற வகையில் கிலோ 40 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டாலும், தண்டவாள உருக்கு ஒரு கிலோ ஆயிரம் ரூபா வரையான பெறுமதியைக் கொண்டது என்று புகையிரத திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like