பிரபல பாடசாலையொன்றில் 34 பேருக்கு டெங்கு : சிகிச்சை தீவிரம்

குருநாகல் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 34 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

குருநாகல் நகரின் முக்கிய பாடசாலைகளில் ஒன்றான சேர். ஜோன் கொத்தலாவலை பாடசாலை மாணவ, மாணவிகளும் ஆசிரியர்களுமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில், சுமார் ஐயாயிரம் மாணவ, மாணவிகள் கல்வி கற்பதுடன் ஐம்பது வரையான கழிவறைகளும் காணப்படுகின்றன.

எனினும், பாடசாலையில் ஒரேயொரு சுத்திகரிப்பாளார் மாத்திரமே சேவையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரால், தனியொரு ஆளாக பாடசாலையின் சுத்திகரிப்பு வேலைகளை மேற்கொள்ள முடியாத நிலையில் பெற்றோர் சங்கத்தினரும் உதவி செய்வதாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், பாடசாலையில் நிர்மாணிக்கப்படும் புதிய கட்டடங்களின் சில பகுதிகளில் தேங்கும் நீர் காரணமாக டெங்கு நுளம்புகள் பரவிக் கொண்டிருப்பதாக பாடசாலை நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாகவே தமது பாடசாலையில் 34 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஸேர். ஜோன் கொத்தலாவலை பாடசாலைப் பிரதேசத்தை டெங்கு அபாய வலயமாகப் பிரகடனப்படுத்தியுள்ள சுகாதார அதிகாரிகள் அப்பிரதேசத்தில் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.

You might also like