புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டிய பொலிஸாருக்கு எதிராக பொலிஸ் விசாரணை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதையல் தோண்டிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு எதிராக வன்னி பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி பொலிஸ் அதிகாரிகள் சிலர் அனுமதியின்றி புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அகழ்வில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தின் சிறு முறைப்பாட்டு பிரிவின் இரண்டு உத்தியோகஸ்தர்கள், சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்த போது தாம் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய அதிகாரிகள் எனவும் ஆயுதம் இருப்பதாக கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

இது குறித்து முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அனுமதிப்பெறாமல், அறிவிக்காது அகழ்வில் ஈடுபட்டமை தொடர்பாக விசாரித்துள்ளார்.

இதன் பின்னர் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தும் பொறுப்பை பொலிஸ் மா அதிபர் வன்னி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் ஒப்படைத்துள்ளார்.

You might also like