வவுனியாவில் வியாபார நிலையத்தில் பணம் திருடிய சிறுவன் பொலிசாரால் கைது!

வவுனியாவில் வியாபார நிலையத்தில் பணத்திருட்டில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் ஒருவனை இன்று (29) மாலை 3.00 மணிக்கு வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் கைது செய்தனர்.

வவுனியா, தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள வியாபாரநிலையம் ஒன்றில் 67 ஆயிரம் ரூபாவை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவன் வியாபார நிலையத்தின் உரிமையாளரால் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

குறித்த சிறுவன் கல்முனைப்பகுதியிலிருந்து வவுனியாவிற்கு வந்துள்ளதுடன் தனது தகப்பனார் அம்புலன்ஸ் சாரதியாக பணியாற்றுவதாகவும் தனக்கு ஏழு சகோதரர்கள் உள்ளதாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளான்.

கடை உரிமையாளர் தாக்கியதன் காரணமாக சிறுவனின் தலையில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து வியாபார நிலையத்தின் உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில்,

விடுமுறை நாளான இன்று கடையின் முன்னால் இருந்துகொண்டிருந்தேன். திடீரென கடையினுள் நுழைந்த குறிப்பிட்ட சிறுவன் பணம் வைக்கும் லாச்சியை திறந்து பணத்தை எடுத்து தனது பொக்கற்றில் வைப்பதை கண்டேன். உடனடியாக சிறுவனை பிடித்து வைத்து பொலிசாருக்கு தகவல் வழங்கினேன் என தெரிவித்தார்.

You might also like