நவம்பர் 27இல் மாவீரர்களை நினைவுகூருவதற்கு தயாராகுவோம்! கிளிநொச்சி மாவட்ட மாவீரர் பணிக்குழு அழைப்பு

தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை உவந்தளித்த புனிதர்களாகிய மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நவம்பர் 27ஆம் திகதியை உணர்வெழுச்சியாகக் கடைப்பிடிப்பதற்குத் தயாராகுமாறு கிளிநொச்சி மாவட்ட மாவீரர் பணிக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

கிளிநொச்சி மாவீரர் பணிக்குழுவின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம்(29) கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை முன்பாக நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போதே மேற்படி மாவீரர் பணிக்குழு தமிழ் மக்களிடம் அழைப்பை விடுத்துள்ளது.

 

இதன்போது, ஊடகவியலாளர்கள் முன் கருத்துரைத்த கிளிநொச்சி மாவட்ட மாவீரர் பணிக்குழுவின் தலைவர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை,

தமிழ் மக்களின் விடுதலைக்காக தாம் வாழவேண்டிய வயதில் தம்மையே கொடையாக்கிய புனிதர்களாகிய மாவீரர்களை ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளாக தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் மக்கள் மிகவும் உணர்வெழுச்சியாகக் கடைப்பிடிப்பது வழமை என்று கூறியுள்ளார்.

 

அந்த வகையில், இம்முறையும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றில் மிகவும் உணர்வெழுச்சியாகக் கடைப்பிடிக்கத் தயாராகி வருகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டின் பின்னர் 7 வருடங்கள் தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் தமிழ் மக்கள் தமது உறவுகளான மாவீரர்களை விதைத்த கல்லறைகளில் சுடரேற்றி நினைவுகூர முடியாதபடி இராணுவத்தினரால் மாவீரர் துயிலும் இல்லங்கள் இடித்தழித்துத் துவம்சம் செய்யப்பட்டிருந்தது.

மாவீரர் துயிலும் இல்லங்களிலுள்ள மாவீரர்களின் கல்லறைகளின் மேல் இராணுவமுகாம்கள் அமைக்கப்பட்டுக் காணப்பட்டதுடன், இராணுவ அச்சுறுத்தல்களும் காணப்பட்டன.

 

கடந்த ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்த இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு இராணுவக் கண்காணிப்பின் கீழ் காணப்பட்டன.

மாவீரர்களான தமது உறவுகளை மாவீரர் நாளில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவுகூருவதற்காகக் காத்திருந்த மாவீரர்களின் உறவுகள் கடந்த 2016இல் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லங்களுள் தற்துணிவாகச் சென்று சிரமதானம் செய்து கடந்த வருடம் மாவீரர் நாள் நிகழ்வுகளை மிகவும் உணர்வெழுச்சியாகக் கடைப்பிடித்திருந்தோம்.

ஆனாலும், தமிழர் தாயகத்தின் பல பாகங்களிலும் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களின் மீது இராணுவ முகாம்கள் தற்போதும் காணப்படுகின்றமை எம்மத்தியில் எப்போது அவை விடுவிக்கப்படும் அங்கு விதைக்கப்பட்ட எமது உறவுகளான புனிதர்களை எப்போது அங்கே அவர்களின் கல்லறைகளில் நினைவுகூரப்போகின்றோம் என்ற எதிர்பார்ப்புக்களுடனும் ஏக்கத்தையுமே ஏற்படுத்தியுள்ளது.

 

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களான கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றில் இம்முறையும் மிகவும் உணர்வெழுச்சியாக மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

அந்த வகையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை மிகவும் உணர்வெழுச்சியாகவும் சீரான ஒழுங்குபடுத்தலுடனும் கடைப்பிடிப்பதற்காக மாவீரர் நாள் ஒழுங்கமைப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

இப்பணிக்குழுவானது கிளிநொச்சியின் பல பாகங்களிலும் இருந்து மாவீரர்களது உறவினர்கள், முன்னாள் போராளிகள், மதகுருமார் ஆகியோரை உள்ளடக்கி சட்டப்படி பிரதேச சபையினது அனுமதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து தமிழர்களின் விடிவுக்காகப் போராடி தம் இன்னுயிரையே கொடையாக்கிய எமது மாவீரர்களை நவம்பர் 27 அன்றைய தினம் நினைவுகூருவதற்கு தயாராகும் நாம் அரசியலுக்கப்பால் சென்று நாம் எல்லோரும் உணர்வுள்ள தமிழர்கள் என்ற எண்ணத்துடன் செயற்படத் தயாராகுவோம் என கிளிநொச்சி மாவீரர் பணிக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

You might also like