வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத வர்த்தக நிலையங்களை அகற்றக்கோரி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்
வவுனியா கொரவப்பொத்தான வீதிப்பக்கமாக ( பள்ளிவாசலிக்கு அருகே ) அமைந்துள்ள சட்டவிரோத வர்த்தக நிலையங்களை அகற்றக்கோரி இன்று (31.10.2017) காலை 10.00மணியளவில் வவுனியா மாவட்ட இளைஞர்களினால் கவனயீர்ப்பு போராட்டமோன்று முன்னேடுக்கப்பட்டது.
குறித்த வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக ஒன்று கூடிய இளைஞர்கள் மதங்களுக்கிடையிலான பிரச்சினைகளை ஏற்படுத்துவது எமது நோக்கமல்ல இதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். இங்கு அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள் எந்தவித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக அமைந்துள்ளது. இந்த வர்த்தக நிலையங்கள் எமது மக்களுக்கு இடையூராக இருப்பதாகவும் இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வினாவிய சமயத்தில் சில அரசியல்வாதிகளின் அழுத்தங்களினால் இந்நிலை காணப்படுவதாக எந்திரி.தி.கெங்காதரன் ( நிறைவேற்றுப் பொறியிலாளர், வீ.அ.அ.சபை,வவுனியா) அவர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நடைபாதையில் வியாபார நிலையங்களை அகற்றுமாறு கோருவதுடன் அகற்றும் வரை எமது போராட்டத்தினை தொடருவோம் என போராட்டத்தை மேற்கொண்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா நகரசபையின் செயலாளர் ஆர்.தயாபரன் கருத்து தெரிவிக்கையில்.
குறித்த ஆக்கிரமிப்பு கடைகளில் 14 கடைகளுக்கு முன்னைய நகரசபையின் நகரபிதா அனுமதி வழங்கியுள்ளார். அத்துடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான நிலத்திலேயே இக்கடைகள் அமைந்துள்ளது. இப்பிச்சனைக்கு நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் வவுனியா நகரசபைக்கு இல்லை இன்று இடம்பெற்ற போராட்டம் தொடர்பாக வீதி அதிகாரசபையினருக்கும் நகர அபிவிருத்தி அதிகார சபையினருக்கும் கடிதம் ஒன்றினை அனுப்ப முடியும் என தெரிவித்தார்.
இதனையடுத்து போராட்டம் மேற்கொண்ட இளைஞர்கள் நகரசபை செயலாளருக்கு சட்டவிரோமாக அமைக்கப்பட்ட வியாபார நிலையங்களின் வரைபடம், வழங்கப்பட்ட கடைகளின் விபரங்களை தற்போது உள்ள கடைகளின் விபரங்களையும் ஒன்றினைத்து மகஜராக கையளித்தனர்.
இக்கவனயீர்ப்பு போராட்டம் குறித்து கடைகளுக்கு சொந்தமான வவுனியா பள்ளிவாசல் நிர்வாகம் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியாவில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ள அனைத்து கட்டிடங்களும் அகற்றப்பட வேண்டும் அப்போது நாங்களே முன்நின்று இந்த கடைகளை அகற்றி தருவோம் என்பதுடன் கடந்த காலத்தில் நகரசபையின் நகரபிதா கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் என தெரிவித்ததுடன் வவுனியாவில் பல இடங்கள் குளங்கள் உட்பட ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
போராட்டம் நடைபெற்ற பகுதியில் பதற்ற நிலமை காணப்பட்டதால் பாதுகாப்புக்காக பொலிசார் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் வர்த்தக நிலையம் தொடர்பாக எந்திரி.தி.கெங்காதரன் ( நிறைவேற்றுப் பொறியிலாளர், வீ.அ.அ.சபை, வவுனியா ) அவர்களின் கடிதமும் கடந்த காலத்தில் நகரசபையின் நகரபிதா கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது.