கிளிநொச்சி இரணைதீவில் மக்கள் குடியேற பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வேண்டும்

கிளிநொச்சி – இரணைதீவுப் பகுதியில் பொதுமக்களின் காணிகளை அடையாளப்படுத்தும் வகையில் காணி அளவீடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பூநகரிப்பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்னேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி- இரணைதீவு நிலத்தை விடுவிக்குமாறு கோரி, இரணைமாதா நகர் பகுதியில் 153 நாட்களுக்கு மேலாக இன்றும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பூநகரி கடற்கடை முகாமில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான

சி.சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜவர்த்தன, பூநகரிப்பிரதேச செயலாளர் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மற்றும் மதத்தலைவர்கள் உடனான சந்திப்பில் இரணைதீவை கடற்படையினர் வைத்திருக்க வேண்டுமென்பதற்கு பல்வேறு காரணங்களை குறிப்பிட்டதுடன், நீண்ட இழுபறிக்குப் பின்னர் பொதுமக்களின் காணிகளை விடுவதற்கு இணக்கம் தெரிவித்ததுடன், காணிகளை அடையாளப்படுத்தவும் இணங்கியுள்ளனர்.

இதனையடுத்து, பூநகரிப்பிரதேச செயலத்தினால் பத்துப்பேர் கொண்ட குழுவினர் இரணைதீவில் பொதுமக்களின் காணிகளை அடையாளப்படுத்தி அளவீடு செய்வதற்கு கடந்த திங்கட் கிழமை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அளவீட்டுப் பணிகளுக்கான பொதுமக்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. தற்போது நில அளவீட்டாளர்கள் உட்பட பத்துப்பேர் கொண்ட குழுவினரே அங்கு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பூர்வீகமாக வாழ்ந்த பொதுமக்கள் எவரும் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரணைதீவு மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் பூநகரிப்பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்னேநதிரன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

“காணியை அடையாளப்படுத்தி அளவீடு செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. பொதுமக்களின் காணிகளை அடையாளப்படுத்துவதற்காகவே இந்த நில அளவை மேற்கொள்ளப்படுகின்றது.

அளவீட்டுப்பணிகள் நிறைவடைந்த பின்னர் இவற்றை விடுவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சுக்கு எழுத்துமூலம் அறிவித்து பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தவுடனேயே மக்களை மீள்குடியேற்ற அனுமதிக்க முடியும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like