கிளிநொச்சியில் பிராந்திய சுகாதாரசேவைப் பணிப்பாளரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலை

கிளிநொச்சியில் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளரை நியமிப்பதில் மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சுக்களிடையில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுவதனால் மாவட்டத்தின் சுகாதார அபிவிருத்தி ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்புக்கள் விசனம் வெளியிட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

வட மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்டு மீண்டெழும் மாவட்டமாக காணப்படும் கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதாரத்துறை என்பது தற்போது பாரிய பிரச்சினையாக உள்ளது.

குறிப்பாக பிரதேச மாவட்ட வைத்தியசாலைகளிலும் வைத்தியர் பற்றாக்குறை காணப்படுவதுடன், மாவட்டப் பொதுவைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை நிலவி வருகின்றது.

இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள், பிராந்திய பணிப்பாளர் இன்றிய நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக செயற்பட்டு வருகிறது.

ஏற்கனவே இருந்த கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ப.கார்த்திகேயன் வெளிநாடு சென்றுள்ள நிலையில், இதற்கான வெற்றிடம் இதுவரை நிரப்பப்படவில்லை.

அத்துடன், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கான வெற்றிடம் வெளிக்காட்டப்படாது மூடி மறைக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்ட பொது வைத்தியசாலைகளுக்கு இருக்கக் கூடிய ஆளணி வளத்தைப்போன்று கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்திருக்க முடியாதிருப்பதாக பல்வேறு தரப்புக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீண்டெழும் இந்த மாவட்டத்தின் வைத்தியத்துறையை மேம்படுத்தும் நோக்கில் தகுதி வாய்ந்த நீண்டகாலம் பணியாற்றக்கூடிய வைத்தியர்களை இந்த வெற்றிடத்திற்கு நிரப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You might also like