ஓராண்டை பூர்த்தி செய்யும் முல்லைத்தீவின் வீதித்தடை

முல்லைத்தீவு நகரில் இருந்து வட்டுவாகல் வரையிலான ஏ35 பிரதான வீதி நீண்ட காலமாக போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியில் அமைந்திருக்கும் மணற்குடியிருப்பு பாலம் சேதமடைந்துள்ள காரணத்தினால் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் கடந்த வருட இறுதிப்பகுதியில் குறித்த வீதி மூடப்பட்டது.

எனினும் இதுவரையில் குறித்த பாலத்தை புனரமைப்பதற்கான எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குறித்த வீதியும் திறக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்களும் வாகன சாரதிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் குறித்த பகுதியில் விவசாயம் செய்யும் விவசாயிகள் உழவு இயந்திரங்களை தமது வயல் நிலங்களுக்கு கொண்டு செல்ல முடியவில்லை எனவும், இதன்காரணமாக தமது வேளாண்மை தொழில் பாதிப்படைந்துள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த பாலத்தை புனரமைத்து வீதித்தடையை நீக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.

You might also like