வவுனியாவில் மூவருக்கு மரண தண்டனை விதித்தார் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன்

வாடகைக்கு அமர்த்திச் சென்ற பாரவூர்யின் சாரதியை வுனியா, செட்டிகுளம் பகுதியில் வைத்து கொலை செய்த குற்றத்திற்காக மூன்று பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்ப்பை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் இன்று வழங்கியுள்ளார்.

2005ஆம் ஆண்டு ஜூன் மாதம் புத்தளம் பகுதியில் இருந்து மன்னார் நோக்கி பாரவூர்தி ஒன்றை மூவர் வாடகைக்கு அமர்த்திச் சென்றுள்ளனர்.

குறித்த பாரவூர்தி வவுனியா, செட்டிகுளம், கப்பாச்சி பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது பாரவூர்த்தி சாரதியை தாக்கி கொலை செய்து விட்டு அதில் பயணித்த மூவரும் தப்பி ஓடியிருந்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட செட்டிகுளம் பொலிஸார் குறித்த பாரவூர்தியை வாடகைக்கு அமர்த்திச் சென்ற செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த வீரய்யா ரவீந்திர ஜோதி, நேசராசா (ராஜி), குமார் ஆகிய மூவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் முதலாம் எதிரியான வீரய்யா ரவீந்திர ஜோதி என்பரை கைது செய்தனர்.

ஏனைய இரண்டாம் எதிரியான நேசராசா, மூன்றாம் எதிரியான குமார் ஆகிய இருவரும் தலைமறைவாகி இருந்தனர்.

குறித்த வழக்கு வவுனியா நீதவான் நீதிமன்றில் பூர்வாங்க வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் மூன்று சந்தேகநபர்களுக்கும“ எதிராகவும் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் திகதி சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப் பகர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது இந்த வழக்கின் 2ஆம், 3ஆம் எதிரிகள் தலைமறைவாகி இருந்தமையால் அவர்கள் இன்றியே விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் வழக்கு மீதான விளக்கங்கள், சாட்சிப் பதிவுகள் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் வழக்கு தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனால் அறிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குறித்த மூன்று சந்தேகநபர்களும் கொலையை விளைவித்த சம்பவத்திற்காக வவுனியா மேல் நீதிமன்றினால் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு அவர்கள் மூவருக்கும் மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதேவேளை, இரண்டாம், மூன்றாம் சந்தேகநபர்களுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் அவர்கள் வழக்கினை நெறிப்படுத்தியிருந்தார்.

You might also like