வவுனியாவில் பாடசாலை சென்ற மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை

வவுனியாவில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள் பலருக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த மாணவர்கள் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் சென்ற காரணத்தினால், வவுனியா புகையிரத நிலைய வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

இதில் வவுனியா வர்த்தகர் சங்கம், முச்சக்கரவண்டி சாரதிகள், சிவில் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வவுனியா நகர போக்குவரத்து நடைமுறைகள் தொடர்பாகவும், முச்சக்கரவண்டி சாரதிகள் வெளிமாவட்டத்திலிருந்து வரும் பயணிகளை அழைத்துச் செல்லும்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடவடிக்கைகள் அமைந்திருந்தால் பொலிஸாருக்கு தகவல்களை வழங்குமாறும், பாடசாலைகளில் பொலிஸார் கடமைகளில் உள்ளதாகவும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பாடசாலைகளுக்கு மாணவர்களை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் மாணவர்களுக்கு தலைக்கவசம் கட்டாயம் அணிந்து செல்லுமாறும், பாடசாலை மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு செல்லும் போது அவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அவ்வாறு செல்லாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்தே இன்று காலை பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து செல்லாத மாணவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

You might also like