கிளிநொச்சி மாவட்டத்தில் அறுவடை செய்யப்படுகின்ற நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை
கிளிநொச்சி மாவட்டத்தில் அறுவடை செய்யப்படுகின்ற நெல்லை, கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய வரட்சியால், விவசாயச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது காலபோகத்தில் அறுவடை செய்கின்ற நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாவட்ட செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
வரட்சியினால் விவசாயச் செய்கைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அறுவடை செய்கின்ற நெல்லை நெல் சந்தைப்படுத்தும் சபையின் ஊடாக கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
அதற்கமைய ஒவ்வொரு விவசாயிகளிடமிருந்தும் தலா இரண்டாயிரம் கிலோ நெல் நெல் சந்தைப்படுத்தல் சபையினுடைய விலைக்கு அமைவாக கொள்வனவு செய்யப்படும்.
ஏற்கெனவே மாவட்டத்தின் களஞ்சிய சாலைகளிலிருந்த நெல் தற்போது விடுவிக்கப்பட்டு விடுகின்றது.
மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற நெல்லை அரிசியாக்கி சந்தைப்படுத்தக் கூடிய அல்லது மாவட்டத் தேவைக்குப்பயன்படுத்தக்கூடிய அரிசியாலை ஒன்றும் கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ளது” என தெரிவித்தார்.
இதேவேளை மாவட்ட உணவுக்களஞ்சியம் ஒன்றும் கிளநொச்சி அறிவியல்நகரில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.