சம்பந்தன் ஐயா தனது தேவைக்காக தமிழ் மக்களை பயன்படுத்த முயற்சிக்கிறார் : தேவராசா

வன்னி மக்கள் முற்றுமுழுதாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். அந்தவகையில் அம் மக்களின் பிரதிநிதியாகிய சிவசக்தி ஆனந்தனை பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்காமை ஏற்றுக்கொள்ள முடியாது பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் சார்பாகவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், தமிழ் மக்கள் பேரவையின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான கி.தேவராசா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

 அரசியலமைப்பு வழிநடத்துக்குழுவினரால் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு தொடர்பான விவாதத்தின்போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்படாமையானது தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா தவறிழைத்துள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது.

தமிழ் தேசிய சுட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக செயல்ப்பட்டுள்ளார். 16 பேர்கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் 15 பேர் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருக்கும் நிலையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு மாத்திரம் அனுமதி வழங்கபடாதது ஏன்…? அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவுகளை தமிழரசுக் கட்சி தனித்துவமாக எடுப்பதை ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு விரோதமாக சிவசக்தி ஆனந்தன் செயல்ப்பட்டிருந்தாலும் அதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அவர் மக்களின் குரலாகவே அங்கு கருத்துக்களை முன்வைத்து வருகிறார். வன்னி மக்கள் முற்றுமுழுதாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். அந்தவகையில் அம் மக்களின் பிரதிநிதியை பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்காமை ஏற்றுக்கொள்ள முடியாது.

சம்பந்தன் ஐயா தனது தேவைக்காக தமிழ் மக்களை பயன்படுத்த முயற்சிக்கிறார் ஒழிய மக்களின் தேவைக்காக தன்னை அர்ப்பணிக்க தயாராக இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like