சிறந்த மனிதநேயனை இழந்தது கிளிநொச்சி மாவட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபரும், மகாதேவா சுவாமிகள் இல்லத்தின் தலைவருமான தி. இராசநாயகம் நேற்று காலமானார்.

இவருடைய மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மக்கள் மத்தியில் இவருக்கு இருந்த செல்வாக்கும், மதிப்பும் தனிச்சிறப்புடையது.

கடந்த காலங்களில் இவர் மக்களுக்கு ஆற்றிய சேவைகளும், உதவிகளுமே இதற்கு காரணமாகும், குறிப்பாக யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இவரின் மக்கள் சேவையானது போற்றத்தக்க வகையில் இருந்துள்ளது.

1968ஆம் ஆண்டு அரச துறையில் தனது சேவையை ஆரம்பித்த இவரின் பயணம், பல்வேறு காலப்பகுதியில் பல்வேறு சவால்களை கடந்து வந்துள்ளது என்றே கூறலாம்.

அந்த வகையில், 1972ஆம் ஆண்டு அபிவிருத்தி உதவியாளராக திட்டமிடல் அமைச்சில் இணைந்துகொண்ட இவர், 1981ஆம் ஆண்டு திட்டமிடல் அதிகாரியாக மன்னார் மாவட்ட மாவட்ட செயலகத்தில் பதவியேற்றார்.

தொடர்ந்து, 1985ஆம் ஆண்டு மன்னார் உதவித்திட்டப் பணிப்பாளராக பதவியேற்றார் அவர், 1987 தொடக்கம் 1992 வரை மன்னாரில் இந்துக் கலாச்சார மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.

1992ஆம் ஆண்டு தொடக்கம் 1996ஆம் ஆண்டு வரை பிரதித் திட்டமிடல் பணிப்பாளராக புனர்வாழ்வு அமைச்சில் கடமையாற்றினார். 1996ஆம் ஆண்டு தொடக்கம் 1997ஆம் ஆண்டு வரை கிளிநொச்சி மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றினார்.

அத்துடன், 1997ஆம் ஆண்டு தொடக்கம் 1999ஆம் ஆண்டு வரை கிளிநொச்சி அரசாங்க அதிபாராக கடமையாற்றி அவர், 1999ஆம் ஆண்டு திட்டமிடல் அமைச்சின் பணிப்பாளராக நியமிக்கப்படார்.

2002ஆம் ஆண்டு மீண்டும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக கடமையேற்று 2007ஆம் ஆண்டு வரையில் பணியாற்றினார்.

 

2007ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபையின் பொதுநிர்வாக உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

2008 தொடக்கம் 2009 வரை மாகாண உள்ளூராட்சி, கூட்டுறவு, கைத்தொழில், சிறுவர் பராமரிப்புச் சேவைகள், சமூக சேவைகள் அமைச்சின் முதலாவது செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அத்துடன், 2009 தொடக்கம் 2011 வரை பொது நிர்வாக அமைச்சின் பிரதிப்பிரதம செயலாளராகவும், வடமாகாண ஆளுநரின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ் மாவட்டங்களின் ஆணையாளராகவும் கடமையாற்றினார்.

கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமியினால் வடக்கு வெகுவாக பாதிக்கப்பட்டது. அதிலும் சுன்டிக்குளம் கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களும் பாதிக்கப்பட்டனர்.

இதில் பாதிக்கப்பட்ட 126 குடும்பங்களை கல்லாறு பகுதியில் சுனாமி வீட்டுத்திட்டம் பெற்றுக்கொடுத்து அவர்களை அங்கு குடியேற்றுவதில் மும்முறமாக செயற்பட்டார்.

1990ஆம் ஆண்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய கிராமமான தண்டுவன்கொட்டி கிராமத்தை 2000ஆம் ஆண்டு GIZ நிறுவனத்திற்கு தத்துக்கொடுத்து, அம்மக்களுக்கு பெரும் உதவி செய்தார்.

மேலும் 20009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நடைபெற்ற போது சிறுவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இவர்களை சிறுவர் இல்லங்கள், நலன்புரி நிலையங்களில் சேர்த்து அவர்களின் வாழ்வுக்கு விளக்கேற்றினார்.

கிளிநொச்சி ஜெயந்தி நகரில் உள்ள குருகுலத்தில் தற்போதும் 570 சிறுவர்கள் வரை பயன்னெறுகின்றனர். இந்த குருகுலம் மற்றவர்களின் உதவியை நாடியிருக்காமல் இருப்பதற்கு 260 ஏக்கர் வயல் நிலங்களை குருகுலம் ஆச்சிரமத்தின் பெயரில் எழுதி வைத்துள்ளார்.

சிறுவர்களுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இவர் உதவிகளை செய்துள்ளார். வன்னி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட முதிவர்களுக்காக யோகர் சுவாமிகள் என்ற முதியோர் இல்லத்தை ஆரம்பித்தார்.

யுத்தம் நடைபெற்ற போது வடக்கு மக்களுக்கு பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது. உணவுப் பொருட்களை கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

இதனால் 2006ஆம் ஆண்டு அவர் தன்னுயை முயற்சியால் அப்பகுதி மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வரவழைத்து அவற்றை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தார்.

2006ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நடைபெறும் காப்பகுதி வரை அவருடை முயற்சியினாலேயே அப்பகுதி மக்கள் உணவு உண்டார்கள் என்றால் அது மிகையாகாது.

இவ்வாறான நிலையிலேயே, தி.இராசநாயகம் அவர்களின் மறைவு மக்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like