கால்நடைகளை பராமரிப்பதில் சிரமங்களை எதிர்நோக்கும் கிளிநொச்சி மாவட்ட மக்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் 35 ஆயிரம் வரையான கால்நடைகள் உள்ளபோதும் அவற்றுக்கான மேச்சல் தரைகள் இல்லாமையால் பயிர்ச்செய்கை காலங்களில் பண்ணையாளர்கள் கால்நடைகளைப் பராமரிப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதாக மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ். கௌரி திலகன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 80 வீதமான மக்களின் வாழ்வாதாரத் தொழிலாக விவசாயமும் கால்நடை வளர்ப்பும் காணப்படுகின்றது.

இவ்வாறு கால்நடை வளர்க்கும் பண்ணையாளர்களில் பெருமளவானோர் திறந்த வெளிமுறையிலான கால்நடை வளர்ப்பையே மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது காலப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் கால்நடைகளை பராமரிப்பதில் பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி, ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரவுகளிலும் கால்நடைகளுக்கான மேச்சல் தரைகள் இன்மையால் பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை வயல் நிலங்களில் பராமரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

பயிர்செய்கை காலங்களில் வயல் நிலங்கள் பயிரிடப்படுகின்ற நிலையில் கால்நடைகளை அவற்றில் பராமரிக்க முடியாது, பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள குளங்களின் நீரேந்துப் பிரதேசங்களிலும் தாழ்நில கண்டல் பகுதிகளிலும் கால்நடைகளை பராமரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

குளங்களிலும் மற்றும் கண்டல் பகுதிகளிலும் நீர்மட்டம் உயரும் போது அங்கிருந்து கால்நடைகளை வெளியேற்றி வேறு இடங்களில் அதாவது வீதியோரங்களிலும் குடியிருப்புக்களிலும் வைத்துப் பராமரிக்கின்ற நிலை காணப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட கால்நடை உற்பத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் கௌரி திலகனிடம் வினவிய போது,

மாவட்டத்தில் 35 ஆயிரம் வரையான கால்நடைகள் இருக்கின்றன. இவற்றுக்கான மேச்சல் தரையென்பது பாரிய பிரச்சினையாக உள்ளது. மேச்சல் தரைகளுக்கான காணிகளை அடையாளப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டு அதன் மூலம் மேச்சல் தரைகளை அமைக்க வேண்டும்.

மாவட்டத்தில் மேச்சல் தரைக்கான காணிகளை அடையாளப்படுத்துகின்ற போதும் அந்தக் காணிகள் வேறு திணைக்களங்களக்குச் சொந்தமான காணிகளாகக் காணப்படுகின்றது என்றும் இவ்வாறு மேச்சல் தரவைகள்அமைப்பதில் தாமதங்கள் காணப்படுவதாகவும் இதனால் பண்ணையாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

You might also like