கிளிநொச்சி மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் உயர்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதுடன், கடந்த 24 மணி நேரத்திற்குள் 49 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் என்.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வறட்சியையடுத்து கடந்த மூன்று தினங்களிற்கு மேலாக பருவமழை பெய்ய ஆரம்பித்திருக்கின்றது.

இதனால் கிளிநொச்சி மாவட்டத்தின் பல குளங்களின் நீர் மட்டம் நாளுக்கு நாள் உயர்வடைந்து வருகின்றது.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் என்.சுதாகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

25 அடி நீர் கொள்ளவைக் கொண்ட அக்கராயன் குளத்தினுடைய நீர் மட்டம் 8 அடி 5 அங்குலமாகவும், உயர்வடைந்துள்ளதுடன், 12.2 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.

36 அடி நீர் கொள்ளவைக் கொண்ட இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 13 அடி 11 அங்குலமாக உயர்வடைந்துள்ளதுடன், 49 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

10 அடி நீர் அளவைக் கொண்ட கரியாலை நாகபடுவான் குளத்தின் நீர்மட்டம் 0.7 அங்குலமாகவும் பதிவாகியதுடன், 93.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

24 அடி நீர்கொள்ளவைக் கொண்ட கல்மடுக்குளத்தின் நீர்மட்டம் 10அடி 1 அங்குலமாகவும், 10 அடி 6 அங்குலம் நீர் கொள்ளவைக் கொண்ட கனகாம்பிகைக் குளத்தின் நீர்மட்டம் 6 அடி 10 அங்குலமாகவும், வன்னேரிக்குளத்தின் நீர் மட்டம் 3அடி 11 அங்குலமாகவும் உயர்வடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும், புதுமுறிப்பு குளத்தின் நீர் மட்டம் 9 அடி 1 அங்குலமாகவும், பிரமந்தனாறுக்குளத்தின் நீர் மட்டம் 5அடி 9 அங்குலமாகவும், குடமுறுட்டிக் குளத்தினுடைய நீர்மட்டம் 4அடி 1 அங்குலமாகவும் உயர்வடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like