கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அபிவிருத்திக்காக வைக்கப்பட்டிருந்த கற்கள் திருட்டு

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அபிவிருத்திக்காக வைக்கப்பட்டிருந்த கற்கள் இனம் தெரியாதவர்களால் எடுத்து செல்லப்பட்டுள்ளதாக இரணைமடு விவசாய சம்மேளன செயலாளர் மு.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

குளத்தின் வான் பகுதியில் நீரின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் மண்ணரிப்பு ஏற்படாதவாறு பாதுகாக்கும் நோக்குடன் அபிவிருத்தி செய்வதற்கென குவிக்கப்பட்ட கருங்கற்களே இவ்வாறு திருட்டு போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களால் இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகளிற்கு நெருக்கடி நிலை ஏற்படும் என அவர் குறிப்பிடுகின்றார்

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான குளமான இரணைமடு குளத்தினுடைய அபிவிருத்தி பணிகளிற்கு இடையுறு விளைவிக்காதவாறு மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதன் மூலம் குளத்தினையும் அதை அண்மித்த பகுதியையும் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

இரணைமடு குளத்தினுடைய அபிவிருத்தி பணிகளில் 80 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதன்படி இவ்வருட காலபோகத்தினை முழுமைப்படுத்த முடியும் எனவும், அடுத்த ஆண்டு வழமைக்கு மாறாக சுமார் 12 ஆயிரம் ஏக்கருக்கு அதிக சிறுபோகம் செய்ய கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குளத்தில் 36 அடி நீர் தேக்க கூடிய வகையில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இவ்வருட பருவ மழையில் முழுமையாக நீர் தேக்கப்படுமாயின் அடுத்த வருட சிறுபோக செய்கையை அதிகரிக்க முடியும் எனவும் இரணைமடு விவசாய சம்மேளன செயலாளர் மு.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

You might also like