கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் தொடச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதிப்பொலிஸ்மா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு மகஜர் கையளிக்கப்பட்டுள்ளன.

12இற்கும் மேற்பட்ட கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு இந்த மகஜரை கையளித்துள்ளன.

மிகப்பழைமை வாய்ந்த வன்னேரிக்குளம், ஐயனார்புரம், திக்காய் போன்ற பகுதிகளில் தொடச்சியாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள் இடம்பெற்று வருவதாகவும் பல்வேறு தரப்புக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் வன்னேரிக்குளம் பிரதேசத்தின் பொது அமைப்புக்கள் மற்றும் அப்பிரதேசத்தில் வாழ்கின்ற நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கையொப்பமிட்ட மகஜரை மாவட்ட அரசாங்க அதிபர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர், கரைச்சிப்பிரதேச செயலாளர், மதுவரித் திணைக்களம், இராணுவப் பொறுப்பதிகாரி, சமுத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், அங்கஜன் இராமநாதன், சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோருக்கு இன்று கையளித்துள்ளனர்.

இவர்கள் கையளித்துள்ள மகஜர்களில், மீள்குடியேற்றத்தின் பின்னர் கசிப்பு உற்பத்தியானது ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாக பல்வேறு இடங்களிலும் பரவியுள்ளது.

இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய தரப்பினர் இதற்குத் துணைபோவதாகவும் இவ்விடயங்களை கண்டும் காணாமல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளதுடன், கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்னர் இந்தப்பிரதேசத்தில் இசந்தக்கசிப்பு தொடர்பில் நடராஜா பரமெஸ்வரன் என்பவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகளால் எமது இளம் சமுகத்தை அழிவின் விழிம்பிற்கு கொண்டு செல்லப்படுகின்றது.

கடந்த 4ம் திகதி திக்காய் குளத்திற்கு அருகில் பெண்ணொருவர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட வேளை அந்தப்பிரதேச மக்களால் சுற்றிவளைக்கப்பட்டு 150லீற்றர் கசிப்பு அழிக்கப்பட்டு பொருட்களும் சேதமாக்கப்பட்டன.

இந்தவிடயம் தொடர்பில் கிராம அலுவலருக்கும் தெரியப்படுத்தப்பட்டது. இதனையடுத்து கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு பெண்ணால் அப்பிரதேசத்தில் வாழ்கின்ற தாய் மற்றும் மகனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பாக அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டபோதும், பொலிஸார் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாது சம்பந்தப்பட்ட தரப்பிடம் சமரசம் பேசி முறைப்பாட்டை உதாசீனப்படுத்தியுள்ளனர் எனச்சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், வன்னேரிக்குளம் பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்றினை அமைக்குமாறும் இப்பிரதேசத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்திகளை கட்டுப்படுத்துமாறும் கோரிக்கை விடுததுள்ளனர்.

இதேவேளை இந்தப்பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி விற்பனைகளால் பாடசாலை மாணவர்கள்,பெண்கள், குழந்தைகள் பல்வேறு அசெகரியங்களுக்குள்ளாவதாகவும் அதில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

You might also like