இரட்டைவாய்க்கால் வீதி புனரமைக்கப்படாமையினால் மக்கள் பாதிப்பு

முல்லைத்தீவு – இரட்டைவாய்க்கால் சந்தி முதல் புதுமாத்தளன் ஊடாக சாலை வரைச் செல்லும் 13 கிலா மீட்டர் நீளமான பிரதான வீதி புனரமைக்கப்படாமையினால் மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.

பரந்தன் ஏ-35 வீதியின் இரட்டைவாய்க்கால் சந்தியிலிருந்து வரைஞர் மடம், அம்பலவன் பொக்கணை, இடைக்காடு, புதுமாத்தளன், பழையமாத்தளன் வரைச் செல்கின்ற வீதி புனரமைக்கப்படாமையினால் சுமார் 1000 இற்கும் மேற்பட்ட மக்கள் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றதாக இந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியின் இடைக்காடு பகுதியில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் வடமாகாண சபை உறுப்பினர்களின் நிதியொதுக்கீட்டில் ஒரு கிலோ மீட்டர் வரையான வீதி மாத்திரமே புனரமைக்கப்பட்டுள்ளதே தவிர ஏனைய 12 கிலோ மீட்டர் வீதி புனரமைக்கப்படாத நிலையில் உள்ளது.

 

இதனால் இந்த பகுதிகளில் வாழும் மக்கள் தமது அன்றாடத்தேவைகளை பூர்த்தி செய்வதில் பெரும் துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு இந்த பகுதிகள் மீள்குடியமர்விற்கு அனுமதிக்கப்பட்டதில் இருந்து கடந்த நான்கு வருடங்களாக இந்த வீதியின் முக்கியத்துவத்தினை கருதி புனரமைத்துத்தருமாறு இந்த பிரதேச மக்கள் கோரி வருகின்றனர்.

 

குறிப்பாக இந்த கிராமங்களுக்கான பிரதான வீதியாகக் காணப்படும் மேற்படி வீதி உட்பட பச்சைப்புல் மோட்டையில் இருந்து ஆனந்தபுரம் செல்லும் வீதி வலைஞர் மடத்திலிருந்து மந்துவில் செல்லும் வீதி உட்பட ஏனைய குடியிருப்பு வீதிகள் இதுவரை செப்பனிடப்படாத நிலையில் காணப்படுகின்றன.

மேலும், இந்த வீதிகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து தமது பகுதிக்கான பிரதான வீதி முதல் ஏனைய குடியிருப்பு வீதிகள் வரைபுனரமைத்து தருமாறு இந்தபகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like