வவுனியாவில் அரச அதிகாரிகளுக்கு பொதுமக்களால் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு

வவுனியா கணேசபுரம் பகுதியிலுள்ள பாடசாலையில் நேற்று (11.11.2017) காலை 10.30 மணியளவில் அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு கணேசபுரம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர்  இரா.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.

கடந்த 40வருடங்களாக இப்பகுதியில் காணி அனுமதிப்பத்திரம் இன்றி வாழ்ந்து வந்து கணேசபுரம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள 6 கிராம மக்களுக்கு கடந்த மாதம் வவுனியாவில் இடம்பெற்ற ஜனாதிபதி நடமாடும் சேவையினூடாக 1100 காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மக்கள் பிரதிநிதிகள், வவுனியா பிரதேச செயலாளர், காணி கிளையின் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான், வடமாகாணசபை உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா, பிரதேச செயலக காணிக்கிளையின் உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர், முன்னாள் கிராம சேவையாளர், கணேசபுரம் பகுதியிலுள்ள 6 கிராம அபிவிருத்திச்சங்க தலைவர்கள், உறுப்பினர்கள், மாதர் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டதுடன் மக்கள் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர், காணி கிளையின் உத்தியோகத்தர்கள், ஆகியோருக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

You might also like