வவுனியாவில் தனிமையிலிருந்த 13 வயதான பெறாமகளை கற்பழித்தவருக்கு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு

வவுனியா – மறவன்குளத்தில் பெறாமகளை கற்பழித்த குற்றத்திற்காக சிறிய தந்தையாருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்ப்பை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனால் இன்று வழங்கப்பட்டுள்ளது.

இதில், மறவன்குளத்தைச் சேர்ந்த 55 வயதான வைரமுத்து சிவலிங்கம் என்பவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டளவில் மறவன்குளம் பகுதியை சேர்ந்த வைரமுத்து சிவலிங்கம் என்பவர் தனது பெறாமகளை (மனைவியின் முதலாவது கணவரின் மகள்) தனிமையில் இருந்த போது இரு தடவை கற்பழித்துள்ளார்.

இது தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் வவுனியா நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

கடந்த 2016.10.24 அன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகிர்வு பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வழக்கு விளக்கம் முடிவுறுத்தப்பட்டு இன்றைய தினம் தீர்ப்புக்கு திகதியிடப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் வழக்கு விசாரணை மேற்கொண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன்,

“எதிரியை குற்றவாளியாக கண்டு எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் முதலாவது குற்றச்சாட்டுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் நஸ்டஈடு செலுத்துமாறும் அதை செலுத்த தவறின் 2 வருட கடூழிய சிறை அனுபவிக்க வேண்டும் எனவும், தண்டப்பணமாக 10,000 ரூபாவினை செலுத்துமாறும் அதை செலுத்த தவறின் ஒரு மாத சாதாரண சிறை அனுபவிக்க நேரிடும் எனவும் அறிவித்துள்ளார்.

இதேவேளை இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டணையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 இலட்சம் ரூபா நஸ்டஈடு செலுத்துமாறும் அதை செலுத்ததவறின் 2 வருட கடூழிய சிறையை அனுபவிக்க வேண்டும் எனவும் தண்டப்பணமாக 10,000 ரூபாவை செலுத்துமாறும் இதை செலுத்த தவறின் ஒரு மாத சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் இத்தண்டனைகள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்” எனவும் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

You might also like