மகளைப் பறிகொடுத்த தாயின் கதறல்

பலாங்கொடை – ரன்தொலவத்த பகுதியில் வீட்டில் யாரும் இல்லாத போது சிறுமியொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

தயார் வேலைக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் தனது பத்து வயதான மகளைக் காணவில்லை என தேடியுள்ளார். இதன்போதே பாதிமா சௌம்யா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அவரது தாயார் தெரிவிக்கையில்,

எனது மூத்த மகள் நான்காம் தரத்தில் கல்வி கற்கிறாள். சம்பவ தினத்தன்று அவர் பாடசாலை செல்லவில்லை. ஏன் பாடசாலை செல்லவில்லை என கேட்டேன். அதற்கு “இன்றைய தினம் என்னால் போக முடியாது. நாளைக்கு செல்கிறேன்” என தெரிவித்தார்.

சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு எனது மகளின் பாடசாலைப் பையினுள் இருந்து கைத்தொலைபேசியொன்றை நான் எடுத்தேன். அடுத்த நாள் நான் எனது மகளுடன் பாடசாலைக்குச் சென்று அதனை ஆசிரியரிடம் ஒப்படைத்தேன்.

இது தொடர்பில் ஆசிரியர் மகளிடம் வினவிய போது அதற்கு அவள் “நான் இதனை எடுக்கவில்லை. இதனை யாரோ எடுத்து எனது பாடசாலைப் பையினுள் போட்டுள்ளார்கள்” என தெரிவித்தாள். இருப்பினும் ஆசிரியர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் மகள் பாடசாலை சென்ற நாட்களிலெல்லாம் அந்த கைத்தொலைபேசியை நீதானே திருடினாய் என அவரிடம் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து “பாதிமா கைத்தொலைபேசி திருடி” என மாணவர்கள் கேலி செய்துள்ளனர்.

இதனை அவர் என்னிடம் தெரிவித்தார், அப்போது நான் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் வரை கண்டிப்பாக பாடசாலை செல்லுமாறு வற்புறுத்தினேன். இதற்கான சரியான தண்டனையை அவள் எனக்கு தந்துவிட்டாள்.

என் கணவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என்னை விட்டு சென்று விட்டார். இப்பொழுது நான் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன். இந்த நிலையில் நான் கடந்த 13ஆம் திகதி தொழிலுக்காக வெளியில் சென்ற போது அவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்தே இது தொடர்பில் அயலவர்கள் மூலமாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது என கூறியுள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் பிரேத பரிசோதனைகள் இடம்பெற்ற நிலையில் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like