கண் சத்திரசிகிச்சையின் போது கிருமித்தொற்று: மாகாண மட்ட நடவடிக்கைகள் நிறைவு

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையின் போது கிருமித்தொற்று ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் குறித்து மாகாண மட்ட நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.இந்த சம்பவம் தொடர்பில் உயர்மட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்கு மத்திய சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ். திருவாகரன் தெரிவித்தார்.

தனியார் வைத்தியசாலைக்கு எதிரான விசாரணைகளை மாகாண ரீதியில் முன்னெடுக்க முடியாது என்பதால், மத்திய அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, மாகாண சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கு அமைய, சுகாதார பணிப்பாளர் தலைமையிலான குழு குறித்த தனியார் வைத்தியசாலை தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ். திருவாகரன் சுட்டிக்காட்டினார்.யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடந்த மாதம் 21 ஆம் திகதி 10 பேருக்கு கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கண் சத்திரசிசிக்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 9 பேர் கிருமித்தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.
இதனை அடுத்து, அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, பின்னர் அவர்களில் 5 பேர் தேசிய கண் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெறும் வரை வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சத்திர சிகிச்சைப் பிரிவுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டவர்களால் தனியார் வைத்தியசாலைக்கு கோரிக்கைக் கடிதமொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இது ஏதேச்சையாக நடைபெற்ற சம்பவம் எனவும் அது தொடர்பில் வைத்தியசாலை மட்டத்தில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வைத்தியசாலை நிர்வாகத்தால் அண்மையில் விடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like