யாழில் மேற்கொண்ட விசேட தேடுதலில் 11 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் இதுவரை இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் 11 பேர் இன்று காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவின் உத்தரவுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட வேண்டிய விசாரணை நடவடிக்கை தொடர்பில் ஏனைய அதிகாரிகளுக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு தீவிரம் அடைந்துள்ள நிலையில், தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களையும் யாழ். நீதிபதியின் உத்தியோகபூர்வ வீட்டிற்கு அழைத்து சென்று, ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, யாழின் சில இடங்களில் மாலை நேரங்களில் இளைஞர்கள் குழுக்களாக நிற்பதனால் யாழ். மக்கள் அச்சமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது.

இதனால் மாலை 6 மணிக்கு பின்னர் சுற்றி திரியும் சந்தேகத்திற்குரிய இளைஞர்களை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். அவர்களின் அடையாளங்களை உறுதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட பிரஜைகள் குழு இன்று பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

You might also like