தமிழ் முஸ்லீம் மக்கள் இணைந்து செயற்படுவது விருப்பமில்லை : ப.சத்தியலிங்கம்

இந்த நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மை மக்களாகவுள்ள தமிழர்களும் முஸ்லீம் மக்களும் இணைந்து செயற்படுவது சிலருக்கு விருப்பமில்லை. இது அவர்களின் வங்குரோத்து அரசியலுக்கு சவாலாக உள்ளது என வடக்கு மாகாண முன்னாள் சகாதார அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா பட்டாணிச்சூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் இணைந்து பயணிக்கவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு ஒன்று இந்த நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக நாங்கள் இருக்கிறோம். இரண்டாவது நாங்கள் இரண்டு சமூகமும் தாய்மொழியாக தமிழை பேசுகிறோம்.

கலாசார, மதரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும் இரண்டு சமூகமுமே பேரினவாதாத்தால் தொடர்ந்தும் நசுக்கபட்டுக்கொண்டிருக்கின்ற இனங்களே.

அரசியல் ரீதியாக உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு இந்த இரண்டு சமூகமும் இணைந்து பயணிக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். எனினும் இதனை குழப்ப சிலர் முயற்சிக்கின்றார்கள். தங்களின் வங்குரோத்து அரசியலுக்காக இனங்களுக்கிடையே முரண்பாட்டை வளர்ப்பதற்காக தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றார்கள்.

கடந்த காலங்களில் சில கசப்பான சம்பவங்கள் நடந்தேறியது உண்மைதான். எனினும் அவற்றை மீண்டும் மீண்டும் மீட்டிப்பார்ப்பதால் எந்த நன்மையும் கிடைக்கபோவதில்லை. தமிழ் முஸ்லீம் ஒற்றுமை என்பது இன்று நேற்று பேசப்பட்ட விடயமல்ல. இலங்கை தமிழ் அரசுக்கட்சியை பொறுத்தவரை அதன் யாப்பிலேயே முஸ்லீம் மக்களுக்கான உரிமைகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

1949ல் தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல. தமிழ் பேசும் மக்களுக்கே ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை முஸ்லீம் மக்களின் தலைவர்களாக இருப்பவர்களில் அநேகமானவர்கள் தமிழ் தேசிய உணர்வாரள்களே . அவர்களும் ஒருகாலத்தில் தமிழரசுக்கட்சியில் அங்கம் வகித்தவர்களே என்றார்.

You might also like