ஈழத்தமிழர்கள் மத்தியிலே அவர் ஒரு சிறந்த போராளி!

ஈழத்தமிழர்கள் மத்தியில் தொண்டமான் ஒரு சிறந்த போராளியாக திகழ்ந்திருக்கிறார் என்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதைக் கண்டித்து இன்றைய தினம்(20) திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தொண்டமான் ஓர் அரை நூற்றாண்டு காலம் ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தவர்.

மலையகத் தமிழர்கள் 13 இலட்சம் பேருக்கு சிங்கள அரசு சேன நாயகா தலைமையிலே என்ன முடிவெடுத்தது என்று சொன்னால், இந்த மலைவாழ் மக்களின் குடியுரிமையைப் பறித்து, ஒரு சட்டம் நிறைவேற்றியது.

அதனை எதிர்த்து தொண்டமான்போராடி, எட்டரை இலட்சம் மலையகத் தமிழர்களின் உரிமைகளை மீட்டுத் தந்தார்.

மீதித் தமிழர்கள் இந்தியாவுக்கு அழைக் கப்பட்டனர். இன்றைக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரேயொரு தமிழர் சிலை யாருடையது என்றால், அது தொண்டமானின் சிலைதான்.

அந்த அளவிற்கு அந்த நாட்டு மக்கள் மத்தியிலே, ஈழத்தமிழர்கள் மத்தியிலே அவர் ஒரு சிறந்த போராளியாக திகழ்ந்திருக்கிறார்.

கடந்த 2009 இனப்படுகொலைக்குப்பிறகு, ஒரு மாற்று அரசாங்கம் வந்தால்கூட, அந்த மாற்று அரசால் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்த்தார்கள்.

ஆனால், எந்த மாற்றமும் இல்லை. ஏமாற்றம்தான் நடந்து கொண்டிருக்கிறது எனவும் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் குறிப்பிட்டுள்ளார்.

You might also like