தமிழரான சின்னையாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி! நல்லாட்சி அரசின் போலி முகம் அம்பலமானது

கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் சிறிமேவன் ரணசிங்ஹவின் சேவை காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 19 திகதியுடன் கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் சிறிமேவன் ரணசிங்ஹ 55வது வயதினை அடைந்துள்ளார். இந்நிலையில், அவருக்கான சேவை நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கடற்படையின் 22வது கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரால் சிறிமேவன் ரணசிங்ஹ, கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பதவியேற்றிருந்தார்.

இந்நிலையில், இவருக்கு தற்போது 6 மாதகால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், இந்த விடயம் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஏனெனில், இலங்கை வரலாற்றில் “50 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை கடற்படையின் தளபதியாக தமிழர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தார்.

50 ஆண்டுகளுக்குப் பின்னர் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்ட தமிழரான ட்ராவிஸ் சின்னையா வெறும் 64 நாட்கள் மட்டுமே அந்த பதவியில் அமர்த்தப்பட்டிருந்தார்.

ட்ராவிஸ் சின்னையா கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டு அவரது 55ஆவது வயது பூர்த்தி காரணமாக கடந்த செப்டம்பர் 23ஆம் திகதியளவில் பதவியில் இருந்து ஓய்வுபெறும் நிலையில் இருந்தார்.

இதனையடுத்து, ட்ராவிஸ் சின்னையாவின் பதவி காலம் மேலும் ஒரு மாதத்திற்கு மட்டுமே நீடிக்கப்பட்டது.

ட்ராவிஸ் சின்னையாவிற்கு முன்னர் கடற்படை தளபதியாக இருந்தவர்களின் சேவை நீடிப்பு என்பது மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் ஏன் வருடக்கணக்கில் கூட நீடிக்கப்பட்டிருந்தது.

எனினும், ட்ராவிஸ் சின்னையாவின் பதவி காலம் மட்டும் வெறுமனே ஒரு மாதத்திற்கு மாத்திரம் நீடிக்கப்பட்டிருந்தது. முன்னாள் கடற்படைத் தளபதி ட்ரவிஸ் சின்னையாவிற்கு ஏன் சேவை நீடிப்பு வழங்கப்படவில்லை என்பதற்கு அரசாங்க தரப்பில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டிருந்தன.

அந்த வகையில், ஏனையோருக்கும் கடற்படைத் தளபதியாக பதவி வகிக்க சந்தர்ப்பம் வழங்கும் நோக்கில் இவ்வாறு சின்னையாவின் சேவைக் காலம் நீடிக்கப்படவில்லை என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

குறிப்பாக, “கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட ட்ரவிஸ் சின்னையாவின் பதவிக் காலத்தை இரண்டு மாதங்களுக்கு வரையறுக்க நேரிட்டது.

அவருக்கு அடுத்தபடியாக பதவி வகிப்போருக்கும் கடற்படை தளபதியாக பதவி வகிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கும் நோக்கிலேயே, சின்னையா ஓய்வுறுத்தப்பட்டார்.

கடற்படைத் தளபதியாக பதவி வகிக்க வேண்டிய, போரில் பாரியளவு சேவைகளை வழங்கிய மேலும் சில சிரேஸ்ட உறுப்பினர்கள் கடற்படையில் சேவையாற்றி வருகின்றனர்.

சின்னையாவிற்கு ஓராண்டு கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருந்தால் ஏனையவர்களுக்கு கடற்டைத் தளபதியாக பதவி வகிக்க சந்தர்ப்பம் கிட்டியிருக்காது” என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மேலும் பலர் கடற்படை தளபதியாக பதவி வகிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து இரண்டே மாதங்களில் ட்ராவிஸ் சின்னையா நீக்கம் செய்யப்பட்டு புதிய கடற்படை தளபதி நியமிக்கப்பட்டிருந்தார்.

தற்போது, புதிய கடற்படை தளபதியின் பதவி காலம் நிறைவடையும் நிலையில் அவருக்கு மேலும் ஆறு மாத காலம் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளமையானது தமிழரான ட்ராவிஸ் சின்னையாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே பார்க்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கையானது நல்லாட்சி அரசாங்கத்தின் போலி முகத்தை வெளிப்படையாக காட்டியிருப்பதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

You might also like