தப்பி ஓடிய ஆவா குழுவின் முக்கியஸ்தருக்கு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு

ஆவா குழுவின் முக்கியஸ்தரான நிசா விக்டர் எனப்படும் நிசாந்தனுக்கு ஒன்றரை வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் கைதாகியிருந்த இவர், நீதிமன்ற வளாகத்தில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பிச் சென்ற குற்றத்திற்காகவே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். கோப்பாய் பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் பிரதான சந்தேகநபராக நிசா விக்டர் காணப்படுகின்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கு இவரை அழைத்துச் சென்ற போது தப்பி ஓடியுள்ளார்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதலில் சில மணி நேரங்களிலேயே இவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சந்தேகநபரை கடுமையாக எச்சரித்த நீதவான் குறித்த நபருக்கு ஒன்றரை வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

You might also like