பணிப்புறக்கணிப்பில் தாதியர்கள் மற்றும் துணைமருத்துவ சேவையாளர்கள்

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் தாதியர்கள் உட்பட பல துறைகளை சேர்ந்த சுகாதார பிரிவினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வரும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

சிகிச்சைக்காக வைத்தியசாலை வந்துள்ள நோயாளர்கள் வைத்தியர்களால் பரிசோதிக்கப்பட்ட போதிலும் மருந்தாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் மருந்துகளை பெற்றுக்கொள்ளாமல் வீடு திரும்பியுள்ளனர்.

 

 

 

 

யாழ்ப்பாணத்தில்..

குறிப்பாக சிறுநீரக நோயாளர்கள் மற்றும் சத்திரசிகிச்சை மேற்கொண்டவர்களிற்கு கூட மருந்துகள் வழங்கப்படாத நிலை காணப்பட்டுகின்றதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வட மாகாண வைத்தியசாலைகளில் பணியாற்றும் அரச தாதியர்கள், துணைமருத்துவ சேவையாளர்கள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள்.

பதவி உயர்வு, சம்பள நிலுவை, மேலதிக நேர கொடுப்பனவு வழங்கல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் வடமாகாண அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் க.ஜனார்த்தனன் கருத்து தெரிவிக்கையில்,

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் அரச தாதியர்கள், துணைமருத்துவ சேவையாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவே இந்தப் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

சம்பள முரண்பாடு, பதவியுயர்வு, மேலதிக நேரக் கொடுப்பனவு நிலுவை, கைவிரல் அடையாள வருகை பதிவேட்டை நடைமுறைப்படுத்த மேற்கொண்ட தீர்மானத்தை நிறுத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

வட மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று காலை 7 மணி தொடக்கம் நாளை காலை 7 மணிவரை பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளவுள்ளனர்.

நோயாளர்களினதும், பொதுமக்களினதும் நன்மை கருதி வேலை நிறுத்தத்தின் போது உயிர்காப்பு நடவடிக்கைகளுக்கான அவசர சிகிச்கைக்கு மாத்திரம் தாதிய உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ். போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்களும் இன்று காலை 7 மணி தொடக்கம் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அந்த வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர் சங்கத் தலைவர் த.பானுமகேந்திரா அறிவித்துள்ளார்.

You might also like