யாழில் வாள் வெட்டுக் குழுவின் கடைசி உறுப்பினர் சிக்கும் வரை பொலிஸ் வேட்டை தொடரும்

வாள் வெட்டுக் குழுவில் உள்ள கடைசி உறுப்பினரை கைது செய்யும் வரை பொலிஸ் வேட்டை தொடரும் என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொசான் பெனார்ன்டோ தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

யாழில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கடந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பலர் பொலிஸ் பிணையில் சென்றுள்ளனர். ஆனால் தேவை ஏற்படின் அவர்களை மீண்டும் கைது செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

வாள் வெட்டுக் குழுக்களை நாம் அடையாளம் கண்டு உள்ளோம். அவர்களின் விபரங்களை பெற்று உள்ளோம். அந்த குழுக்களைச் சேர்ந்த கடைசி உறுப்பினரை கைது செய்யும் வரையில் எமது தேடுதல் வேட்டை தொடரும்.

இளவாலை, அச்சுவேலி, காங்கேசன்துறை, பலாலி மற்றும் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுகளில் நேற்றைய தினம் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதில் 10 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.

இதனால் மக்கள் வீணாக பதற்றமடையவோ குழம்பமடையவோ தேவையில்லை எனவும் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொசான் பெனார்ன்டோ தெரிவித்துள்ளார்.

You might also like