யாழில் பொலிஸாரினால் வெள்ளை வானில் பலாத்காரமாக கடத்திச் செல்லப்பட்ட இளைஞன்

யாழில் இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் வெள்ளை வானில் பலாத்காரமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த கடத்தல் சம்பவம் யாழ். மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக நேற்று இரவு 8 மணியளவில் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பொலிஸாரின் இந்த கடத்தல் சம்பவத்தினால் யாழில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

யாழ். இராமநாதன் வீதி கலட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

யாழ். நகரில் உள்ள புடவை விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றும் இவர் வேலை முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக யாழ். பஸ் நிலையத்தில் காத்திருந்த போது, வெள்ளை வானில் வந்த கோப்பாய் பொலிஸார் இந்த இளைஞரை வானில் ஏறுமாறு தெரிவித்துள்ளனர்.

இதற்கு இளைஞர் ஏற மறுத்ததை தொடர்ந்து, இளைஞனின் கையை முறித்து பலாத்காரமாக ஏற்றிச்சென்றுள்ளார்.

பொலிஸாரின் இந்த செயலை யாழ். பஸ் நிலையத்தில் நின்றவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இவ்வாறு பலாத்காரமாக கடத்திச் சென்ற போது, அங்கிருந்தவர்கள் பொலிஸாரிடம் இந்த இளைஞர் தமக்கு தேவையான ஒருவர் என்றும் கூறியுள்ளனர்.

பொலிஸாரினால் கடத்திச் செல்லப்பட்ட இளைஞரின் பெற்றோர் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு சென்று மகனை விடுவிக்குமாறு கேட்டுள்ளனர்.

இதற்கு பொலிஸார் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் இளைஞரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

You might also like