இலங்கை: தெற்கு மாகாணத்தில் புதிய முதலைகள் பூங்கா

இலங்கையில் தெற்கு மாகாணத்தில் முதலைகளுக்கான பூங்கா ஒன்றை அமைக்க வன விலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.காலி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஹிக்கடுவ தேசிய சரணாலயத்தின் பொறுப்பதிகாரி ஏ.வீ. கசுன் தரங்க இதனைத் தெரிவித்தார்.
இதன்படி காலி மாவட்டத்தில் அமைந்துள்ள பலப்பிட்டி பகுதியில் இந்த முதலைகளுக்கான பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தில் முதலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணத்தினால் மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது இந்த முதலைகள் பொதுமக்கள் வசிக்கும் பிரதேசங்களுக்கு ஊடுருவி வருவதன் காரணமாக மக்கள் மிக ஆபத்தான நிலைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக கசுன் தரங்க கூறினார்.
இதன் காரணமாக காலி மாவத்தில் ஆறுகளில் வசிக்கும் முதலைகளை பிடித்து புதிதாக அமைக்கப்படவுள்ள பூங்காவில் விடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் முதலைகளை கண்காணித்து பராமரிக்க முடியுமென்றும் முதலைகள் காரணமாக பொது மக்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை தடுக்க முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like